சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை காப்பீட்டுத் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பெற்றுத்தர வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
|சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டுத் திட்டம் மூலம் பெற்றுத்தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் கடந்த ஆண்டு பெய்த மழையினால் நெற்பயிர்கள் பெருமளவு பாதிப்படைந்தன. இது குறித்து, வேளாண் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளை நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என்று, சென்ற ஆண்டு நான் இந்த ஆளும் தி.மு.க. அரசை பலமுறை வலியுறுத்தியிருந்தேன்.
அதிமுக அரசு ஆட்சிபுரிந்தபோது, பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 2017-2018 முதல் நான்கு ஆண்டு ஆட்சி காலத்தில் நிவாரணத் தொகையாக சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாயை பாதிக்கப்பட்ட விவசாயப் பெருமக்களுக்கு பெற்றுத் தந்தது. அதன்படி, அதிகாரிகள் குழு பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடி கள ஆய்வு செய்து, பாதிப்புகளுக்கு ஏற்ப ஏக்கருக்கு குறைந்தபட்சமாக ரூ.7,000/- முதல் அதிகபட்சமாக பாதிப்புகளுக்கு ஏற்ப பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நிவாரணம் பெற்றுத்தரப்பட்டது. அதேபோல், வேளாண் மற்றும் தோட்டப் பயிர்களுக்கும் பாதிப்புகளுக்கு ஏற்ப பயிர் காப்பீட்டுத் திட்டம் மூலம் இழப்பீடு பெற்றுத்தரப்பட்டது.
ஆனால், சில நாட்களுக்கு முன்பு, இந்த அரசு 2021-2022-ம் ஆண்டுக்கு, பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகளுக்கு ரூ.480 கோடியை பெற்றுத் தந்ததாக விளம்பரப்படுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தை துவக்கியது. அதன்படி, பாதிக்கப்பட்ட பெரும்பாலான விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு குறைந்தபட்சமாக வெறும் ரூ.250/- மட்டுமே வழங்கப்பட்டதாக விவசாயிகள் புகார் கூறியுள்ளனர். மேலும், பல கிராமங்களுக்கு காப்பீட்டு நிவாரணம் பெற்றுத்தரப்படாமல் ஏமாற்றப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
உதாரணமாக, மன்னார்குடி வருவாய் வட்டத்தில் மட்டும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 40 கிராமங்கள் உட்பட திருவாரூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கும் ஒரு ரூபாய் கூட பயிர் காப்பீட்டு நிவாரணம் பெற்றுத்தரப்படவில்லை என்றும், குறிப்பாக இந்த அரசின் முதல் அமைச்சர் ஆய்வு மேற்கொண்ட கிராமங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குக்கூட பயிர் காப்பீட்டுத் தொகை பெற்றுத்தரப்படவில்லை என்றும் விவசாயிகளும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் கடும் அதிருப்தியும், வேதனையும் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வேளாண் துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான கடலூரில், நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு வெறும் ரூ.250/- மட்டுமே பயிர் காப்பீடாக பெற்றுத்தரப்பட்டதாகவும், எனவே, வேளாண் துறை அமைச்சர் முன்பே ஆர்ப்பட்டம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
2021-ம் ஆண்டு புயல் மற்றும் பருவ மழையின் போது, எதிர்கட்சித் தலைவராக, நான் நேரடி கள ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசும் போதும், அறிக்கைகளின் வாயிலாகவும், உடனடியாக வேளாண் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினை அனுப்பி, தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட நிலங்களை கணக்கெடுத்து, பாதிப்பிற்கு ஏற்ப பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் தகுந்த இழப்பீடு பெற்றுத்தர இந்த அரசின் முதல் அமைச்சரை வற்புறுத்தினேன்.
ஆனால், அப்போது பதிலளித்த இந்த அரசின் வேளாண் துறை அமைச்சர் எனது அறிக்கையில் உள்ள உண்மைகளை புரிந்துகொள்ளாமல் பொத்தாம் பொதுவாக பதிலளித்தார். எனினும், அதிகாரிகள் குழு, பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்திக்காமல் உட்கார்ந்த இடத்திலேயே கணக்கெடுப்பு என்ற பெயரில் புள்ளி விவரக் குறிப்பை இந்த அரசுக்கு அனுப்பி வைக்கிறது என்றும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக அரசின் முதல் அமைச்சர், மாவட்ட அமைச்சர்கள் மற்றும் துறை அமைச்சர்கள் நேரில் சென்று, துறை அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கி கள ஆய்வு செய்து உண்மையான சேத விவரங்களை அரசுக்கு அனுப்புமாறும், மீண்டும் நான் வற்புறுத்தினேன்.
ஆனால், இந்த அரசு நேரில் சென்று பாதிப்புகளை கணக்கெடுக்காததன் விளைவு, இன்று விவசாயிகள் நடுத்தெருவில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் செலுத்திய பயிர் காப்பீட்டு பிரீமியம் தொகையைக் கூட பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இந்த அரசு பெற்றுத்தரவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.
எனது தலைமையிலான அரசு, தனது நான்காண்டு ஆட்சி காலத்தில் ஏக்கர் ஒன்றுக்கு பெற்றுத் தந்த குறைந்தபட்ச நிவாரணமான ரூ.7000/- எங்கே ? இந்த திமுக அரசு பெற்றுத் தந்த ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.250/- எங்கே ? இந்த அரசின் நிர்வாக குளறுபடிகள் காரணமாக தமிழக விவசாயிகள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதற்கு இந்த ஒரு நிகழ்வே எடுத்துக்காட்டாகும்.
மேலும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்த பயிர் காப்பீட்டு நிவாரணத் தொகையைக் கூட இந்த அரசு பெற்றுத்தரவில்லை. உதாரணமாக, பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் திருவாரூர் மாவட்டத்திற்கு ரூ.94.56 கோடி, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ரூ.13.52 கோடி, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரூ.16.16 கோடி என்று இழப்பீடு பெற்றுத் தந்த இந்த அரசு, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டின் மூலம் பெற்ற இழப்பீட்டுத் தொகை வெறும் 36 லட்சம் மட்டுமே. அப்படியானால், தஞ்சையில் மழையே பெய்யவில்லையா? பயிர்கள் சேதமடையவில்லையா? என்பதை இந்த அரசுதான் விளக்க வேண்டும். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தரப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வருகின்றன.
'எங்கும் ஊழல், எதிலும் ஊழல்' என்று செயல்படும் இந்த அரசு, விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நிவாரணம் பெற்றுத் தருவதில் தங்களுக்கு எந்தவிதமான கமிஷனும் கிடைக்காது என்பதால், விவசாயப் பெருமக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தரும் உயரிய நோக்கில் மெத்தனமாக பணியாற்றுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
எனவே, கணக்கெடுப்பில் உள்ள குளறுபடிகளை நீக்கி பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருவர்கூட விடுபடாமல், சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை காப்பீட்டுத் திட்டம் மூலம் பெற்றுத்தர வேண்டும் என்று இந்த தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.