< Back
மாநில செய்திகள்
மா விளைச்சல் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்-கலெக்டரிடம், விவசாயிகள் கோரிக்கை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

மா விளைச்சல் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்-கலெக்டரிடம், விவசாயிகள் கோரிக்கை

தினத்தந்தி
|
21 May 2022 10:11 PM IST

மா விளைச்சல் பாதிப்பு காரணமாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

முத்தரப்பு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள், மாங்கூழ் தொழிற்சாலை உரிமையாளர்கள், அரசு அதிகாரிகள் என முத்தரப்பு கூட்டம் நேற்று நடந்தது.

இதில் மா விவசாயிகள் பேசியதாவது:-

கடந்த ஆண்டு நடந்த முத்தரப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இதுவரை நிறைவேற்றவில்லை. இந்த ஆண்டு காற்று மற்றும் போலியான மருந்தால், மா விளைச்சல் குறைந்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தரமற்ற மருந்துகளை விற்பனை செய்வதால் பூச்சி தாக்குதல் அதிகரிக்கிறது. இதனால் 5 ஏக்கருக்கு ஒரு டன் மாங்காய் மட்டுமே வந்துள்ளது. எனவே ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். மருந்துகளை ஆய்வு செய்ய தனிக்குழு ஒன்றை நியமிக்கவேண்டும்.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் தான் மா உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் மாவிற்கு இன்சூரன்ஸ் காப்பீடு இல்லை. மற்ற மாநிலங்களில் இருந்து மாம்பழங்கள் கொள்முதல் செய்வதால், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பாதிக்கின்றனர். எனவே இங்கு முதலில் மாங்காய்களை வாங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். பின்னர் வெளி மாநிலங்களில் வாங்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

மாங்கூழ் தொழிற்சாலை உரிமையாளர்கள் பேசியதாவது:-

மூலப்பொருட்கள்

தொழிற்சாலைகளின் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. தொழிலாளர்களின் சம்பளம், மின்சார கட்டண உயர்வு, அதிமாக விதிக்கப்படும் ஜி.எஸ்.டி., வெளி நாடுகளில் மாங்கூழ் விலை குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் மாங்கூழ் தொழிற்சாலைகள் குறைந்துள்ளன. கடந்த 2010-ம் ஆண்டில் 65 மாங்கூழ் தொழிற்சாலைகள் இருந்த நிலையில் படிப்படியாக குறைந்து தற்போது 7 தொழிற்சாலைகள் மட்டுமே இயங்குகின்றன. அண்டை மாநிலங்களில் இருந்து தினமும் 2 ஆயிரம் டன் மாங்காய் வருகிறது.

இங்கு கிடைக்கும் பிஞ்சு காய்களால் இனிப்பு கிடைப்பதில்லை. இதனால் சர்க்கரை சேர்க்கப்படுவதால், வெளி நாடுகளில் விலை குறைகிறது. மாங்காய் தேவைப்படும் போது விவசாயிகள் அறுவடை செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் அறுவடை செய்வதால் மா விலை குறைகிறது.

ஒரு விவசாயி 100 கிலோ மாங்காய் கொண்டு வந்தாலும் வாங்கப்படும். மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள், தேவையான மாங்காய்களை கொடுப்பதாக உறுதி அளித்தால் வெளி மாநிலங்களில் இருந்து மாங்காய் வாங்க மாட்டோம். இவ்வாறு அவர்கள் பேசினர்.

கூட்டத்தில் கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி பேசியதாவது:-

அரசுக்கு கோரிக்கை

மா விளைச்சல் பாதிப்பு இருப்பது உண்மை. 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு இழப்பீடு கேட்டு அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. போலியான மருந்து விற்பனை பற்றி தகவல் தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை போல் மாங்காய்களை ஒரே நேரத்தில் அறுவடை செய்வதில்லை. இதனால் மாவிற்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீடு தருவதில்லை. இந்த பிரச்சினை இந்தியா முழுவதும் உள்ளது. இது குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும். மா டன் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க மாங்கூழ் தொழிற்சாலை நிறுவனங்கள் முன் வர வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி பேசினார்.

இந்த கூட்டத்தில் செல்லகுமார் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, தோட்டக்கலை இணை இயக்குனர் பூபதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, வேளாண் வணிக துணை இயக்குனர் காளிமுத்து மற்றும் விவசாய சங்க பிரநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்