கோயம்புத்தூர்
சேதமடைந்த தடுப்பணையை சொந்த செலவில் சீரமைத்த விவசாயிகள்
|அங்கலகுறிச்சியில் சேதமடைந்த தடுப்பணையை விவசாயிகள் சொந்த செலவில் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆறுகள், மழைநீர் நீரோடைகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி தண்ணீர் சேமிக்கப்படும். இதன் மூலம் அந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதன் காரணமாக கிராமப்புறங்களில் விவசாய தேவைக்காக தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. ஆனால் கட்டப்படும் தடுப்பணைகள் பெரும்பாலும் பராமரிப்பது இல்லை.
இதுபோன்று பொள்ளாச்சி அருகே அங்கலகுறிச்சியை அடுத்த நரிமுடக்கு பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் தடுப்பணை கட்டப்பட்டது. தடுப்பணையை முறையாக பராமரிக்காததால் சில ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தது. இதனால் மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் விவசாயிகளே களம் இறங்கி தடுப்பணையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக விவசாயிகள் தங்களது சொந்த செலவில் ஜல்லி, சிமெண்டு உள்ளிட்ட கட்டுமான பொருட்களை வாங்கி பணிகளை செய்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
நரிமுடக்கு பகுதியில் விவசாய தேவைக்காக நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன் தடுப்பணை கட்டப்பட்டது. இதற்கிடையில் தடுப்பணை சேதமடைந்ததால் மழைக்காலங்களில் நீரை சேமிக்க முடியவில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதித்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் ஒன்று சேர்ந்து நிதியை திரட்டி தடுப்பணை சீரமைத்து வருகிறோம். இதேபோன்று பல இடங்களில் தடுப்பணைகள் சீரமைக்காததால் நிலத்தடி நீர் பாதிக்கிறது. எனவே தடுப்பணையை தூர்வாரி மழைக்காலங்களில் நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.