< Back
மாநில செய்திகள்
தஞ்சையில் விவசாயிகள் ரெயில் மறியல் - பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு கைது
மாநில செய்திகள்

தஞ்சையில் விவசாயிகள் ரெயில் மறியல் - பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு கைது

தினத்தந்தி
|
17 Feb 2024 5:48 PM IST

விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்,

விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சை ரெயில் நிலையத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ரெயில் மறியல் செய்யப்போவதாக அறிவித்து இருந்தனர். இதனால் ஏராளமான போலீசார் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நுழைவு வாயிலை போலீசார் பூட்டி, இரும்பு தடுப்புகளை அமைத்து இருந்தனர்.

இந்நிலையில், தஞ்சை ரெயில்நிலையம் முன்பு இன்று விவசாயிகள் பலர் ஒன்று கூடி பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் திடீரென கோஷங்கள் எழுப்பியபடி ரெயில் நிலையத்திற்குள் நுழைவதற்காக சென்றனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

பின்னர் விவசாயிகள் தடுப்புகளை அகற்றி கொண்டு ரெயில் நிலையத்திற்குள் சென்று சோழன் விரைவு ரெயிலை மறித்தனர். ரெயில் என்ஜீன் மற்றும் பெட்டிகளில் விவசாயிகள் ஏறிவிடக்கூடாது என்பதற்காக ரெயில் மெதுவாக வந்து கொண்டிருந்தபோதே 10-க்கும் மேற்பட்ட போலீசார் பெட்டிகளில் ஏறி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டம் 5 நிமிடம் நடைபெற்றது. அதன்பிறகு மறியலில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு உள்பட 56 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.

மேலும் செய்திகள்