< Back
மாநில செய்திகள்
பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
13 Oct 2022 2:47 PM IST

ஊத்துக்கோட்டையில் பயிர் காப்பீடு தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

ஊத்துக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் பேர் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை செலவு செய்து நெற்பயிர் இட்டனர். விவசாயிகள் ரூ.497 விதம் பயிர் இன்சூரன்ஸ் செய்தனர். சில மாதங்களுக்கு முன் பெய்த பலத்த மழைக்கு 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட நெற் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதற்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் இதுவரை இழப்பீடு தொகை வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து ஊத்துக்கோட்டை வேளாண் துறை அலுவலகம் எதிரே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்க தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் துளசி நாராயணன், மாவட்ட செயலாளர் சம்பத், துணை செயலாளர் ரவி, மாவட்ட குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, வாசுதேவன், வட்ட செயலாளர் பழனி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.

இதையடுத்து வேளாண் துறை உதவி இயக்குனர் இளங்கோவனை சந்தித்து இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். இதை பெற்றுக்கொண்ட அவர் மாநிலம் முழுவதும் இழப்பீடு வழங்க தமிழக அரசு ரூ.481 கோடி ஒதுக்கி உள்ளதாகவும், இந்த தொகை கிடைத்தவுடன் ஓரிரு நாளில் இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்