காஞ்சிபுரம்
ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி போராட்டம்
|ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டார்.
புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 58). விவசாயி, இவரது நிலத்திற்கு அருகே கிராமத்திற்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நீர்நிலை புறம்போக்கு நிலத்தை அதே கிராமத்தை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து பயிர் செய்வதற்காக உழுது வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த விவசாயி ராஜேந்திரன் அந்த பகுதி வருவாய்துறையினரிடம் இது தொடர்பாக புகார் தெரிவித்தார். வருவாய்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.
போராட்டம்
இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் கடம்பூர் கிராமத்தில் உள்ள செல்போன் கோபுரம் மீது ஏறி அமர்ந்து கொண்டு கிராமத்திற்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் 2 மணி நேரம் போராடி விவசாயி ராஜேந்திரனிடம் சமரச பேச்சுவார்தையில் ஈடுபட்டனர். அதன் பேரில் ராஜேந்திரன் கீழே இறங்கி வந்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.