< Back
மாநில செய்திகள்
விவசாய நிலங்களை பாதிக்காமல் புறவழிச்சாலை அமைக்கக்கோரி விவசாயிகள் மனு
அரியலூர்
மாநில செய்திகள்

விவசாய நிலங்களை பாதிக்காமல் புறவழிச்சாலை அமைக்கக்கோரி விவசாயிகள் மனு

தினத்தந்தி
|
21 Feb 2023 12:31 AM IST

விவசாய நிலங்களை பாதிக்காமல் புறவழிச்சாலை அமைக்கக்கோரி விவசாயிகள் மனு அளித்தனர்.

ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர். அப்போது அங்கு வந்த கோக்குடி கிராம மக்கள், கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், கோக்குடி கிராமத்தில் கிராம மக்களின் நன்கொடை மற்றும் உழைப்பால் கட்டப்பட்டுள்ள நான்கு கடைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு கிராமத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஊராட்சியில் கண்காணிப்பு கேமரா அமைத்தல், ஏரிகளுக்கான நீர்வரத்து வாய்க்கால்களை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக செலவிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசின் பொது இடத்தில் கட்டப்பட்டுள்ள 4 கடைகளும் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளதாக கூறி, அவற்றை இடிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதன் அடிப்படையில் ஒன்றிய வளர்ச்சி அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர். எனவே கிராமத்தின் வளர்ச்சிக்காக கட்டப்பட்டுள்ள கடைகளை இடிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் இது பற்றி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

விவசாயிகள் மனு

மருவத்தூர் கிராம விவசாயிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில், அரியலூரில் இருந்து செந்துறை வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புறவழிச்சாலைக்காக மருவத்தூர் பகுதியில் அனுமதியின்றியும், முன் அறிவிப்பு இன்றியும், சாலை அமைப்பதற்கான எல்லை கற்களை ஊன்றியுள்ளனர். இதனால் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது விளை நிலங்களை இழக்கும் சூழல் உள்ளது. மேலும் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வகையான புறவழிச்சாலை அப்பகுதியில் உள்ள சிமெண்டு ஆலைகளின் பயன்பாட்டிற்காகவே அமைக்கப்படுவதாக சந்தேகம் எழுகிறது. எனவே விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் ஏற்கனவே அறிவித்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாதையில் புறவழிச்சாலையை அமைத்து சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும், என்று கூறியிருந்தனர்.

கண்டனம்

குணமங்கலம் கிராமத்தில் உள்ள கரும்பாயிரம் கோவிலை அப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 13-ந் தேதி இந்து சமய அறநிலைய துறையை சேர்ந்த செயலாளர் உள்ளிட்ட அலுவலர்கள், கரும்பாயிரம் கோவிலுக்கு வந்து மக்களிடம் எவ்வித விசாரணையும் செய்யாமலும், எந்தவித விவரமும் சொல்லாமல் இக்கோவிலை இந்து சமய அறநிலையத்துறை வசம் எடுத்துக் கொள்ளப்போவதாக கூறி கையெழுத்து வாங்கி சென்றுள்ளனர். எந்தவித பிரச்சினையும் இல்லாத சூழ்நிலையில் அரசு அலுவலர்கள் இவ்வாறு நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது. மேலும் மக்களின் பொது உரிமை மற்றும் வழிபாட்டு உரிமையை பறிக்கும் வகையிலும் மற்றும் சட்ட விரோதமாகவும் செயல்பட்ட அலுவலர்கள் மீது விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுத்து கரும்பாயிரம் கோவிலை குல தெய்வ வழிபாட்டிற்கு உத்தரவிட வேண்டும் என்று கலெக்டரிடம், கிராம மக்கள் மனு அளித்தனர்.

மேலும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Tags :
மேலும் செய்திகள்