கரூர்
கடைமடை வரை தண்ணீர் வழங்கக்கோரி விவசாயிகள் மனு
|கடைமடை வரை தண்ணீர் வழங்கக்கோரி விவசாயிகள் மனு அளிக்கப்பட்டது.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். பொதுமக்களிடமிருந்து 719 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் நங்காஞ்சி அணை கிழக்கு பாசன வாய்க்கால் பாதுகாப்பு சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- இடையகோட்டையில் அமைந்துள்ள நங்காஞ்சி அணை நீர்த்தேக்க திட்டம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவு பெற்றது. இந்த அணையின் கிழக்கு பகுதியில் உள்ள கீழ்மட்ட மற்றும் மேல்மட்ட வாய்க்காலில் இதுநாள் வரை பணி நிறைவு பெறாத காரணத்தினால் கடந்த 3 ஆண்டுகளாக அணை நிறைந்த போதிலும் கடைமடை வரை தண்ணீர் வரவில்லை. எனவே இந்த இரண்டு வாய்க்காலில் நிறைவு பெறாத பணிகளை உடனே செய்து தர வேண்டும். நங்காஞ்சி அணையின் வாய்க்கால் செல்லும் நிலங்களை உட்பிரிவு செய்து அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.