< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்  விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்  கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது

தினத்தந்தி
|
20 May 2022 6:21 PM GMT

நாமக்கல்லில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது.

நாமக்கல்:

நாமக்கல்லில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது.

ஆயக்கட்டு விவசாயிகள்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கிராமந்தோறும் நடமாடும் கால்நடை மருத்துவ வசதி வழங்க வேண்டும், பாம்பு கடித்து இறக்கும் விவசாயிகளுக்கு வயது வரம்பின்றி இழப்பீடு வழங்க வேண்டும்.

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். விவசாயிகளை பயிர்களுக்கு காப்பீடு செய்ய நிர்ப்பந்திக்க கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசப்பட்டது. மேலும் காவிரி கண்காணிப்பு குழுவில் ஆயக்கட்டு விவசாயிகளை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு கரும்பு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். முன்னதாக கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் ஏற்கப்பட்டது.

பரபரப்பு

இதனிடையே கூட்டத்தில், மொளசியில் உள்ள தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் கதவணையால் நீர் தேங்கி பாதிப்பிற்கு உள்ளான நிலங்களுக்கு, 2013 நிலம் கையகப்படுத்துதல் மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்துதல் சட்டத்தின் அடிப்படையில் காலதாமதமின்றி நியாயமான இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் பேசினார். அப்போது இதுகுறித்து உரிய விவரங்களுடன் மனு அளிக்குமாறும், வேறு பிரச்சினைகள் குறித்து பேசுமாறும் கலெக்டர் ஸ்ரேயா சிங் கூறினார். அதை பொருட்படுத்தாமல் பெருமாள் தொடர்ந்து பேசியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன், வேளாண்மை இணை இயக்குனர் அசோகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் நடராசன், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கணேசன், நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பாலசுப்ரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்