< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பெரம்பலூரில் 22 ஆண்டுகளை கடந்த உழவர் சந்தை- நாள்தோறும் 15 டன் காய்கறிகள் விற்று சாதனை

தினத்தந்தி
|
14 July 2022 12:25 AM IST

பெரம்பலூரில் உள்ள உழவர் சந்தை 22 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் 15 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உழவர் சந்தை

பெரம்பலூரில் வடக்குமாதவி சாலையில் உழவர் சந்தை கடந்த 2000-ம் ஆண்டு மே மாதம் 7-ந் தேதி தமிழ்நாட்டின் 42-வது உழவர் சந்தையாக தொடங்கப்பட்டது. வேளாண்மை விற்பனைக்குழு மூலம் 60 கடைகளுடன் இயங்கி வருகிறது. உழவர் சந்தை தொடங்கப்பட்ட காலத்தில் காய்கறி மற்றும் பழங்கள் வரத்து 4 முதல் 5 டன் வரை இருந்து வந்தது. தற்போது காய்கறிகள், பழங்கள், கீரைகள் என 13 முதல் 15 டன் வரை விற்பனை நடைபெறுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நொச்சியம், வடக்குமாதவி, லாடபுரம், அன்னமங்கலம், தொண்டமாந்துறை, பெரியவடகரை, தம்பிரான்பட்டி, விஸ்வக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் 70 முதல் 90 விவசாயிகள் பெரம்பலூர் உழவர் சந்தைக்கு வருகை தருகின்றனர். இவர்களுக்கு தராசு மற்றும் எடைக்கற்கள் எந்தவித கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.

விலை குறைவு

தங்களது கிராமத்தில் இருந்து காய்கறிகளை அரசு பஸ்களில் போக்குவரத்து சுமைக்கூலி இன்றி கொண்டு வரமுடிவதால் அதில் ஒரு சிறு தொகை விவசாயிகளுக்கு மிச்சப்படுகிறது. ஏற்கனவே உழவர் சந்தையில் அடையாள அட்டை பெற்றுள்ள விவசாயிகள் தங்களது வயலில் விளைந்த காய்கறிகள், கனிகள், கீரைகள், பயறுவகைகளை முந்தைய தினம் அறுவடை செய்தவற்றை மறுநாள் காலையில் பொதுமக்களுக்கு பசுமையாக விற்பனை செய்யப்படுகிறது.

பொதுமக்களுக்கு காய்கறிகள்-கனிகள் வெளிச்சந்தையை விட 10 முதல் 15 சதவீதம் விலை குறைவாக கிடைக்கிறது. காலிபிளவர், உருளைக்கிழங்கு, பீன்ஸ் ஆகிய மலை காய்கறிகளை விவசாயிகள் வெளிச்சந்தையில் வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர்.

15 டன் காய்கறிகள் விற்பனை

உழவர் சந்தையில் வடக்குபகுதி (நார்த் பேஸ்), கிழக்கு மற்றும் தென்பகுதியில் கடைகள் உள்ளன. உழவர் சந்தைக்கு நாள்தோறும் வந்து காய்கறிகளை வாங்கி செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதனை ஈடுகட்டும் வகையில் மேலும் 24 கடைகள் வடக்கு மற்றும் தென்பகுதியின் உட்புறத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவை உள்பட ஏறத்தாழ ரூ.24 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் குளியல் அறை மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று வேளாண்மை வணிக துணை இயக்குனர் சிங்காரம் தெரிவித்தார்.

உழவர்சந்தை காலை 6 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை இயங்குகிறது. தினமும் 12 அல்லது 15 டன் காய்கறிகள் விற்பனையாகிறது. 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் நுகர்வோர்கள் பயனடைந்து வருகின்றனர். அமாவாசை, பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் காய்கறிகள் விற்பனை சராசரியாக 20 டன்னை எட்டுகிறது.

இளநீர், மலர்கள்

பெரம்பலூர் உழவர் சந்தையில் நாட்டு இளநீர் விற்பனைக்கு மவுசு எப்போதும் இருந்து வருகிறது. இங்கு நாட்டு இளநீர் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்கப்படுகிறது. பூ மற்றும் மலர்கள் உழவர் சந்தைக்கு வெளியே விற்பனை செய்யப்படுகிறது. யாரேனும் விவசாயிகள் மலர்கள் விற்பனை செய்ய முன்வந்தால் உழவர் சந்தைக்குள் கடை ஒதுக்கப்படும் என்று உழவர் சந்தை நிர்வாக அதிகாரி செண்பகம் தெரிவித்தார். அப்போது உதவி நிர்வாக அலுவலர்கள் மாரிதேவன், வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

பெரம்பலூர் உழவர் சந்தை 22 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து 23-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதற்கு வடக்குமாதவி சாலை, சாமியப்பா நகர், எளம்பலூர் சாலை, மேட்டுத்தெரு நுகர்வோர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்