திருவண்ணாமலை
விவசாயிகள் தரையில் படுத்து உருண்டு நூதன ஆர்ப்பாட்டம்
|தடை செய்யப்பட்ட பூச்சி மருந்த விற்பனையை கண்டித்து விவசாயிகள் தரையில் படுத்து உருண்டு நூதன ஆர்ப்பாட்டடத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வாக்கடை புருசோத்தமன் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் நெற்றியில் நாமம் அணிந்த படி வந்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து "கோவிந்தா, கோவிந்தா" கோஷம் எழுப்பினர்.
பின்னர் அவர்கள் திடீரென தரையில் படுத்து உருண்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டம் குறித்து வாக்கடை புருசோத்தமன் கூறுகையில், ''தனியார் கடைகளில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு செய்து அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும்.
கடந்த 2020-ம் ஆண்டு முதல் கால்நடை கொட்டகை கோரி மனு செய்து கணினியில் பதிவேற்றம் செய்த மனுதாரர்களுக்கு பலன் கிடைக்கவில்லை. இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.தொடர்ந்து அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.