< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

ரெயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

தினத்தந்தி
|
3 Oct 2023 12:15 AM IST

தமிழகத்துக்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து கீழ்வேளூரில், ரெயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். அப்போது போராட்டக்காரர்கள்- போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சிக்கல்:

ஆர்ப்பாட்டம்

காவிரி நீர் விவகாரத்தில் தலையிடாத மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் வழங்க மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும் தமிழ்நாடு விவசாய சங்க கூட்டு இயக்கம் மற்றும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தலைவர் தனபால் தலைமையில் நெற்கதிர்களை கையில் ஏந்தி நாகை மாவட்டம் கீழ்வேளூர் ரெயில்வே கேட் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக ரெயில்வே கேட் முன்பு நாகை துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பழனிச்சாமி, பாலகிருஷ்ணன் தலைமையில் 100 போலீசார், இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ரெயில் மறியல்

அப்போது வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரெயில் அங்கு வந்தது. உடனே போராட்டக்காரர்கள் சிலர் போலீசாரின் தடுப்பை மீறி ரெயில்வே கேட் அடியில் புகுந்து தண்டவாளத்தில் படுத்து ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டக்காரர்களை தண்டவாளத்தில் இருந்து குண்டுக்கட்டாக தூக்கி சென்று அப்புறப்படுத்தினர்.

தள்ளுமுள்ளு

இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ெரயில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 பேரை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.இந்த மறியல் போராட்டம் காரணமாக வேளாங்கண்ணி- திருச்சி பயணிகள் ரெயில் 10 நிமிடங்கள் தாமதமாக கீழ்வேளூரில் இருந்து புறப்பட்டு சென்றது. மேலும் ரெயில்வே கேட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தால் கீழ்வேளூர்- கச்சனம் சாலையில் ½மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்