அரியலூர்
நிலங்களை திரும்ப ஒப்படைக்கும் அரசு உத்தரவால் விவசாயிகள் மகிழ்ச்சி
|ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக கடந்த 1996-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததையடுத்து விவசாயிகள் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
ஜெயங்கொண்டம்,
அனல் மின் திட்டம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலக்கரி அதிக அளவில் இருப்பதால் அனல் மின் திட்டம் தொடங்கலாம் என திட்டமிடப்பட்டு ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள மேலூர், கல்லாத்தூர், தேவனூர், கீழகுடியிருப்பு, புதுக்குடி, இலையூர், மருக்காலங்குரிச்சி, தண்டலை உள்ளிட்ட 13 கிராமங்ளில் கடந்த 1996-ம் ஆண்டு 1,210 பேரிடம் 8,370 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மேலும் 1,030 ஏக்கர் அரசு நிலமும் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என அறிவித்துள்ளது. மேலும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகையை திரும்ப தர வேண்டிய அவசியம் இல்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை உரிய விவசாயிகளிடம் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என தெரிகிறது.
தமிழக அரசுக்கு நன்றி
ஜெயங்கொண்டம் அருகே உள்ள தண்டலை கிராமத்தை சேர்ந்த தர்மதுரை என்பவர் கூறுகையில், நிலங்களை திருப்பிக்கொடுத்தது தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நிலம் இல்லாமல் சொந்த ஊரில் அகதிகளாக வாழ்ந்து வந்தோம். எங்கள் நிலங்களை திருப்பி கொடுத்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த சிவப்பு என்பவர் கூறுகையில், ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டத்திற்கு நிலம் கொடுத்து 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் திட்டத்தினை செயல்படுத்தாமலும், நிலங்களை திருப்பி கொடுக்காமலும் இருந்தது தங்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கக்கூட கடன் பெறவும், மற்ற அரசு உதவி பெறவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது நிலத்தை திருப்பி கொடுக்கும் என்ற தீர்ப்பு என்பது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
வழக்கு போடுவதாகவும்...
தண்டலை கிழக்கு கிராமத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் கூறுகையில், தண்டலை கிழக்கு நிலங்களை இழந்து சொந்த ஊரில் விவசாயம் சார்ந்த தொழில் ஏதும் செய்யமுடியாத சூழலால் திருப்பூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விடைதேடி சென்ற சூழல் ஏற்பட்டது. 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆகியும் திட்டம் செயல்படுத்தப்படும் நிலத்தை திருப்பி கொடுக்காமலும் இருந்தது என்னைச் சார்ந்த அனைவருக்கும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இதற்காக பல்வேறு கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தின. ஆனால் எந்த பயனும் ஏற்படவில்லை தற்போது இந்த செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்கு தமிழக அரசுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.
புதுக்குடியை சேர்ந்த கலியமூர்த்தி என்பவர் கூறுகையில், ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய காலத்தில் நஷ்டஈடு வழங்காமலும், திட்டத்தை செயல்படுத்தாமலும் ஏழை-எளிய விவசாயிகளை வஞ்சித்த டிட்கோ நிறுவனத்தின் மீது வழக்கு போடுவதாகவும், அரசு ஆணைபடி 40 சதவீத நஷ்டஈடு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காவிட்டால் வழக்குப்போட போவதாக கூறினார்.