< Back
மாநில செய்திகள்
தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
கடலூர்
மாநில செய்திகள்

தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
22 April 2023 12:15 AM IST

தேங்காயை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூரில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் 3 அல்லது 4-வது வாரம் வெள்ளிக்கிழமைகளில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான (ஏப்ரல்) விவசாயிகள் குறைகேட்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர், விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி, கலெக்டரிடம் அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். அது பற்றிய விவரம் வருமாறு:-

தேங்காய் கொள்முதல்

செந்தாமரை: நெல் கொள்முதல் செய்யப்படுவது போல், தேங்காயை அரசே கொள் முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிகாடு அருகே ஈச்சங்காடு பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு உரிய தீர்வு காண வேண்டும். எங்கள் பகுதியில் சுடுகாடு வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இதேபோல் பெரும்பாலான விவசாயிகள் தேங்காயை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அதற்கு கலெக்டர், இதுதொடர்பாக பரிசீலித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

உழவன் செயலி

மகாராஜா: திட்டக்குடி அருகே ஆவினங்குடியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை ஆக்கிரமிப்பால் சுருங்கி போய் உள்ளது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை அகலப்படுத்த வேண்டும். வெலிங்டன் ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமானுஜம்: உழவன் செயலியில் எங்கள் பகுதி காண்பிக்கப்படுவதில்லை. இதனால் எங்கள் பகுதி விவசாயிகள், உழவன் செயலி மூலம் பயன்பெற முடியவில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லிக்குப்பம் பகுதி விளைநிலங்களில் உள்ள மோட்டார் கொட்டகையை மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தி செல்கின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கால்நடைகளுக்கு காப்பீடு

ரவீந்திரன்: எந்திரங்கள் இல்லாமல் இனி விவசாயம் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் அனைத்து விவசாயிகளும், எந்திரங்களை பயன்படுத்த ஏதுவாக கிராமப்புற வேளாண் சாலைகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதால், காட்டுமன்னார்கோவில் அருகே கீழப்புளியம்பட்டு கிராமத்தில் முதன் முதலாக கிராமப்புற சாலை அமைக்கப்பட்டது. இதுபோல் 2022-2023 -ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் 2750 கி.மீ. தூரம் சாலை அமைக்க ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியில் வாய்ப்புள்ள இடங்களில் கிராமப்புற வேளாண் சாலைகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக் வேண்டும். கால்நடைகளுக்கான காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். வெளிப்படை தன்மையுடன் கால்நடை காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

வேல்முருகன்: சேத்தியாத்தோப்பு -கம்மாபுரம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவு படுத்த வேண்டும். என்னென்ன பயிர்களை எந்த காலங்களில் பயிர் செய்யலாம் என விவசாய அலுவலகத்தில் உள்ள பெயர் பலகையில் எழுதி வைக்க வேண்டும். பயிர் காப்பீடு செய்தால் ஒப்புகை சீட்டு வழங்குவதில்லை. அதனால் ஒப்புகை சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் பாதிப்பு

குமராட்சி ரங்கநாயகி: தென்னையில் கருப்பு வண்டு பாதிப்பு உள்ளது. அதனால் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொள்முதல் செய்யப்படும் விளைபொருட்களுக்கு பணம் கொடுப்பது மிகவும் காலதாமதமாகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் பரிசீலித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்