கடலூர்
பெருமாள் ஏரி சுற்றுலா தலமாக மாற்றப்படும்அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி
|பெருமாள் ஏரி சுற்றுலா தலமாக மாற்றப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
குறிஞ்சிப்பாடி,
பெருமாள் ஏரியில் ஆய்வு
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெருமாள் ஏரி ரூ.112 கோடி செலவில் தூர் வாரும் பணி தொடங்கி நடைபெற்றது வருகிறது. இந்த பணியை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அதன்பிறகு ஏரிக்கரையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் முன்னிலை வகித்தார். கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன் வரவேற்றார். கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
ஒரு கோடி மரகன்றுகள்
பெருமாள் ஏரியை தூர்வார வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை. தற்போது அது நிறைவேறி உள்ளது. தூர்வாரும் பணி முறையாக நடைபெறுகிறதா? என விவசாயிகள் கண்காணிக்க வேண்டும். ஏரியை மட்டும் தூர் வாராமல் 11 பாசன வாய்க்கால்களையும் தூர்வார மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதி பற்றாக்குறையால் அருவா மூக்கு திட்டம் செயல்படுத்தப்படவில்லை. விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். திட்டம் செயல்படுத்தப்பட்டால் இப்பகுதியில் வெள்ள பாதிப்பு வெகுவாக குறையும்.
ஏரியில் இருந்து 24 லட்சம் கன மீட்டர் அளவு மண் எடுக்கப்பட்டு 3 இடங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் இதனை பயன்படுத்தி தாழ்வான பகுதிகளை சீர்படுத்திக் கொள்ளவேண்டும். ஏரி பகுதியில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. விரைவில் ஏரி தூர்வாரி கரைகளை பலப்படுத்துவதோடு, பெருமாள் ஏரியை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.
சூரிய ஒளி மின்சாரம்
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் பேசுகையில், பெருமாள் ஏரி தூர்வாரும் பணி தற்போது 82 சதவீதம் முடிவடைந்துள்ளது. இத்திட்டத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும். ஏரியில் உள்ள நீர் ஆவியாகாமல் இருக்க சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு, என்.எல்.சி. நிறுவனம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் அதியமான் கவியரசு, மாவட்ட கல்விக்குழு தலைவர் சிவக்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் ஞானசேகரன், சரவணன், தாசில்தார் சுரேஷ், வடலூர் நகரமன்ற தலைவர் சிவக்குமார், நகர செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.