கடலூர்
நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்குவதை தடுக்க வேண்டும்குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
|நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்குவதை தடுக்க வேண்டும் என்று விருத்தாசலத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
விருத்தாசலம்,
குறைகேட்பு கூட்டம்
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தாலுகா அலுவலகங்களிலும் குறைகேட்பு கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், தாலுகா அலுவலகங்களில் குறைகேட்பு கூட்டம் நடத்த உத்தரவிட்டார்.
அதன் பேரில் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தாசில்தார் அந்தோணி ராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
வண்டல் மண்ணுக்கு அனுமதி
அலெக்சாண்டர்:- அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் பெறுவதை தடுக்க வேண்டும். குறுவை சாகுபடி பணிக்கு முன்பு வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். தங்க.தனவேல்:-விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இ-நாம் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித்தர வேண்டும்.
விவசாய வேலைக்கு ஆள் இல்லை
எருமனூர் சரவணன்:- தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகள் நடைபெறும் காலங்களில விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் அவதியடைகின்றனர். அதனால் அனைத்து விவசாய வேலைகளுக்கும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப் பணிகளை ஒதுக்க வேண்டும்.
டிவி புத்தூர் முத்து:- எங்கள் பகுதியில் உள்ள ஏரியின் ஆக்கிரமிப்பை அகற்றி, ஏரி மற்றும் வாய்க்காலை தூர்வாரி தர வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் ஆக்கிரமிப்பின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம். உடனடியாக ஏரியை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்கு தாசில்தார் அந்தோணி ராஜ், விவசாயிகளுடைய அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இதில் வருவாய்த்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.