நாமக்கல்
பால் கூட்டுறவு சங்கங்களை மீட்க வேண்டும்
|நாமக்கல் மாவட்டத்தில் நலிவடைந்து வரும் பிரதம பால் கூட்டுறவு சங்கங்களை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-
ஈஸ்வரன் (திருச்செங்கோடு எம்.எல்.ஏ.): நான், 4 மாதமாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்கிறேன். இந்த கூட்டம் குறித்து தகவல் அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதில், நான் கூட்டத்தில் கலந்து கொண்டதாக மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளது. என்ன பேசினேன் என்பது பதிவாகவில்லை.
நாமக்கல் மாவட்டத்தில் வருவாய் துறையில் லஞ்சம் அதிகரித்து உள்ளது. அதனால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவற்றை கட்டுப்படுத்த, மாதம் தோறும் ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும்.
கூடுதல் பணம் வசூல்
பாலசுப்பிரமணியன் (பொதுச்செயலாளர், விவசாய முன்னேற்ற கழகம்): ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தில், தேர்வு செய்யப்பட்ட கிராமங்களுக்கு தென்னை சாகுபடி செய்யும் விவசாயிக்கு இனகவர்ச்சி பெட்டி வழங்குகின்றனர். ஒரு பெட்டி வெளி மார்க்கெட்டில் ரூ.200 மற்றும் மருந்து ரூ.400 என மொத்தம் ரூ.600 ஆகும். ஆனால் வேளாண் துறையில் கூடுதலாக பணம் வசூல் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜேந்திரன்:-
மாவட்டத்தில் உள்ள பிரதம பால் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்து வருகிறது. அவற்றை மீட்க கலெக்டர் தலைமையில் பால்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில், உறுப்பினர்கள் மற்றும் சங்க பணியாளர்கள் சிறப்பு கூட்டத்தை நடத்தி கருத்துக்களை அரசுக்கு சமர்பிக்க வேண்டும்.
நடேசன் (விவசாயி) : பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் தகுதி உள்ள விவசாயிகள் சிலருக்கு 12-வது தவணையை நிறுத்தி விட்டனர். ஒரு சில விவசாயிகளுக்கு மட்டுமே உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். தகுதி உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரவணன் (விவசாயி): நாமகிரிப்பேட்டை ஒன்றியம் அரியாகவுண்டம்பட்டி குருவாலா சாலையில் ஆக்கிரமிப்பு உள்ளது. இது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அவற்றை அகற்றி, போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும்.
இவ்வாறு விவாதம் தொடர்ந்தது.
கோமாரி நோய் தடுப்பூசி
பின்னர் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசும்போது, நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் 3-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி 3 லட்சத்து 31 ஆயிரம் கால்நடைகளுக்கு போட திட்டமிடப்பட்டு உள்ளது. இதை விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.