< Back
மாநில செய்திகள்
விழுப்புரம் மாவட்டத்தில்உரங்கள் தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறதுகுறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில்உரங்கள் தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறதுகுறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
31 Dec 2022 12:15 AM IST

விழுப்புரம் மாவட்டத்தில் உரங்கள் தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.


விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது விவசாயிகள், கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் உரங்கள் தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது. அதுபோல் உர விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்கு கலப்பட உரங்கள்தான் விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல் தரமற்ற விதைகளைத்தான் விற்பனை செய்கின்றனர். எனவே விவசாயிகளுக்கு தரமான விதைகள், கலப்படமில்லா உரங்கள் விற்பனை செய்ய வேண்டும். மாவட்டத்தில் கால்நடைகள் கோமாரி நோய் போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றன. கால்நடை முகாம் நடைபெறும் விவரங்களை விவசாயிகளுக்கு அதிகாரிகள் சரிவர தெரியப்படுத்துவதில்லை.

காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள் அழித்து நாசம் செய்து வருகின்றன. ஆனால் அவற்றை கொல்ல இயலாத நிலை உள்ளது. எனவே தேசிய விலங்குகள் பாதுகாப்பு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரக மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் விவசாயிகளுக்கு கால்நடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றை எவ்வாறு பெறுவது, அதற்கான பயனாளிகள் தேர்வு, வழிமுறைகள் போன்ற எந்த விவரங்களும் தெரிவிக்கப்படுவதில்லை. பெரியசெவலையில் உள்ள செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலைப்பணியாளர்களுக்கான ஊதியம் குறைவாக உள்ளது. ஆலையில் கரும்பு அரவை நன்றாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும்.

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு பொருட்கள் வழங்கி 25 நாட்களாகியும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் உரிய தொகை வரவு வைக்கப்படவில்லை. ஏனாதிமங்கலம் மணல் குவாரியில் மாட்டுவண்டிகள், டிப்பர் லாரிகள் மூலம் மணல் அள்ளுவதற்கு அனுமதி உண்டா அல்லது லாரிகளுக்கு மட்டும்தான் அனுமதியா என்ற விவரத்தை தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கு பதிலளித்து கலெக்டர் மோகன் பேசியதாவது:-

ஆய்வு செய்யப்படும்

பொங்கல் திருநாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்குவதற்கு சுமார் 6 லட்சம் செங்கரும்பு கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எஞ்சியுள்ள கரும்புகளை பிற மாவட்டத்திற்கு விற்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து உரக்கடைகளில் உரத்தின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு வேளாண்மை சார்ந்த திட்டங்கள் குறித்து எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளின் திட்ட விளக்கக்கையேடு வழங்கப்படும். விவசாயிகளுக்கு தேவையான அளவு நெல் விதை சம்பா பருவம் முடிந்த பிறகு நவரைக்கு தேவையான அளவு நெல் அனைத்து வட்டாரத்திலும் இருப்பு வைக்கப்படும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனை கடைகள் மூலம் தரமான உரங்கள் மட்டுமே விற்கப்படும். அலுவலர்கள் மூலம் தொடர்ந்து ஆய்வு நடத்தி இது உறுதிப்படுத்தப்படும்.

விதிமீறினால் நடவடிக்கை

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விற்பனை செய்த நெல்லிற்கு விரைவாக பணம் வழங்கவும், விளைநிலங்களுக்குள் வரும் காட்டுப்பன்றியை கட்டுப்படுத்தவும் வேளாண்மைத்துறை மற்றும் வனத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏனாதிமங்கலம் மணல் குவாரியில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மணல் அள்ளப்பட வேண்டும். இதில் விதிமீறல் நடைபெற்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்