< Back
மாநில செய்திகள்
விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்துக்கு வராத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்துக்கு வராத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

தினத்தந்தி
|
26 Aug 2022 10:15 PM IST

குறைகேட்பு கூட்டத்துக்கு வராத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பேசினர். விவசாயிகள் பேசிதாவது:-

ரங்கராஜ்:- பருவமழை காலம் தொடங்க இருப்பதால், ஏரி, குளங்களுக்கான நீர் வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும். கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.

ஏரி ஆக்கிரமிப்பு

ராஜகோபால்:- செங்கனாம்கொள்ளை ஏரி மராமத்து பணிகள் தொடங்கி 5 ஆண்டுகளாகியும், பணிகள் முடியாமல் உள்ளது. இந்த பணியை விரைந்து முடித்திட வேண்டும். மேலும் மாட்டு தீவனத்திற்கு அரசு விலை நிர்ணயம் செய்வதுடன், கள்ளக்குறிச்சி பகுதியில் ஜவ்வரிசி தொழிற்சாலை தொடங்க வேண்டும்.

ஜாயின்சா:- தரணி சர்க்கரை ஆலையில் கடந்த 3 வருடங்களாக விவசாயிகளுக்கு கரும்பு நிலுவை தொகை ரூ. 23 கோடியே 8 லட்சம் கொடுக்கப்படாமல் உள்ளது. இதை பெற்றுத்தர வேண்டும்.

ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள ஏரி, வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

உரக்கடைகளில் ஆய்வு

கிருஷ்ணமூர்த்தி :- பருவமழையையொட்டி விளம்பார் ஏரி ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். விளம்பார் கிராமத்தில் வேளாண்மை துறை மூலம் ஒருவர் குழு அமைத்து ரூ.5 லட்சம் மானியத்தில் டிராக்டர் வாங்கி உள்ளார். அந்தநபர் மீண்டும் மானியத்தில் டிராக்டர் வாங்கி உள்ளார். எனவே இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரி, அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரைக்கும் நடவடிக்கை இல்லை.

கள்ளக்குறிச்சியில் உரக்கடையில் யூரியாவை பதுக்கி வைத்துக் கொண்டு தர முடியாது என கூறுகிறார்கள் எனவே உரக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பலர் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். அவர்களது கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளித்தனர்.

கோட்ட அளவில் குறைகேட்பு கூட்டம்

அதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் பேசுகையில்,

மாதந்தோறும் வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தை நடந்தி இருந்தால் இதுபோன்ற அதிக குறைகள் இருந்திருக்காது. இனி வருவாய் கோட்டாட்சியர் மாதந்தோறும் இது போன்ற விவசாயிகள் கூட்டம் நடத்த வேண்டும். அந்த கூட்டத்தில் விவசாயிகளின் குறைகளை அதிகாரிகள் உடனுக்குடன் தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்ட அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த கூட்டத்தில் வனத்துறை, கால்நடைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் வரவில்லை. அடுத்த மாதம் நடைபெறும் விவசாயிகள் குறை கேட்பு கூட்டத்திற்கு துறை அதிகாரிகள் வரவில்லையென்றால் அவர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

களப்பணி செய்ய வேண்டும்

அதிகாரிகள் அலுவலகத்திலேயே இருக்காமல், அந்தந்த பகுதிகளுக்கு களப்பணிக்கு சென்று மக்களை சந்திந்து அவர்களின் குறைகளை கேட்டு ஆய்வு செய்து தீர்க்க வேண்டும். விவசாயிகள் கொடுக்கும் மனு மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்.

அரசு விவசாயத்துக்கு முன்னுரிமை அளித்து, தனி பட்ஜெட் அறிவித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாயத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும், இதற்கு விவசாயிகளும் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜயபாபு, வேளாண்மை இணைய இயக்குனர் வேல்விழி, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் முருகேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்