கன்னியாகுமரி
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
|குமரி மாவட்டத்தில் உரத்தை அதிக விலைக்கு விற்றால் கடைக்கு ‘சீல்' வைக்கப்படும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் கூறினார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் உரத்தை அதிக விலைக்கு விற்றால் கடைக்கு 'சீல்' வைக்கப்படும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் கூறினார்.
குறைதீர்க்கும் கூட்டம்
குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 'குமரி இதழ்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தகத்தை கலெக்டர் அரவிந்த் வெளியிட விவசாயிகள் பெற்றுக் கொண்டனர். இந்த புத்தகம் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள் கூறியதாவது:-
யூரியா தட்டுப்பாடு
குமரி மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. தனியார் கடைகளில் உரம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே, இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அட்டை வழங்க வேண்டும். கிள்ளியூர் வேளாண் துறை அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் அங்கு செல்லும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் தரக்குறைவாக நடந்து கொள்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இரணியல் அருகே குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாசன சானல்களை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பேச்சிப்பாறை அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். பேயன்குழி பகுதியில் நடந்து வரும் இரட்டை கரை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடைக்கு 'சீல்' வைப்பு
இதற்கு பதில் அளித்து கலெக்டர் அரவிந்த் மற்றும் அதிகாரிகள் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. மே மாதத்தில் இது வரை சராசரியாக 45.9 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை சராசரியாக 341.31 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. விவசாயத்திற்கு தேவையான விதைகள் இருப்பு உள்ளது. இந்த வார இறுதிக்குள் 500 டன் யூரியா உரம் இறக்குமதி செய்யப்பட உள்ளது. தனியார் கடைகளில் உரங்களின் விலைப்பட்டியலை வெளியே வைக்குமாறு கூறி உள்ளோம். அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்தால் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும். பொதுப்பணித்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இ-சேவை மையம் மூலமாக உழவர் அட்டை பெற விண்ணப்பிக்கலாம். கிள்ளியூர் வேளாண் துறை அலுவலகத்தில் புகார் செய்யப்பட்ட ஊழியர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
அணை திறப்பு
குளங்கள் மற்றும் கால்வாய்களில் கழிவுநீர் கலக்கும் இடங்களை கான்கிரீட் போட்டு மூட வேண்டும். பேயன்குழி பகுதியில் நடந்து வரும் இரட்டைக் கரை சானலில் சீரமைப்பு பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். பேச்சிப்பாறை அணையை தூர்வார திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு முதல் பருவ சாகுபடிக்காக ஜூன் 1-ந் தேதி பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் சத்திய ஜோஸ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வசந்தி, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சுவாமிநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) வாணி, மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் ஊமைதுரை விவசாய பிரதிநிதிகள் புலவர் செல்லப்பா, வின்ஸ் ஆன்றோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.