விழுப்புரம்
திண்டிவனத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
|திண்டிவனத்தில் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா தலைமையில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது.
திண்டிவனம்,
திண்டிவனம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் திண்டிவனம் ஜக்காம்பேட்டையில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா தலைமை தாங்கினார். இதில் திண்டிவனம் கோட்டத்துக்குட்பட்ட மரக்காணம், மேல்மலையனூர், செஞ்சி, திண்டிவனம் பகுதிகளை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களது குறைகள் பற்றி சப்-கலெக்டரிடம் முறையிட்டனர்.
கூட்டத்தில் மழைக்காலம் தொடங்கி விட்டதால் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம் நடத்தவேண்டும். பனப்பாக்கம் நீர்வரத்து வாய்க்கால் பகுதியில் பொதுப்பணித்துறை அனுமதியில்லாமல் தடுப்பணைகட்டப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும். விளை நிலங்களில் அறுந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பிகளை உடனடியாக சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி, குளம், நீர்வரத்து வாய்க்கால் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசினர். இதனை கேட்ட சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்த கூட்டத்தில் திண்டிவனம் தாசில்தார் அலெக்சாண்டர் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.