கன்னியாகுமரி
கொள்முதல் நிலையத்தில் நெல்மூடைகளை கொடுக்க முடியாமல் விவசாயிகள் பரிதவிப்பு
|தாழக்குடி கொள்முதல் நிலையத்தில் கடுமையான கட்டுப்பாடுகளால் நெல்மூடைகளை விற்க முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகிறார்கள். அத்துடன் தனியார் அரிசி ஆலைகளுக்கு குறைந்த விலையில் விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆரல்வாய்மொழி,
தாழக்குடி கொள்முதல் நிலையத்தில் கடுமையான கட்டுப்பாடுகளால் நெல்மூடைகளை விற்க முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகிறார்கள். அத்துடன் தனியார் அரிசி ஆலைகளுக்கு குறைந்த விலையில் விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நெல் கொள்முதல்
தோவாளை ஒன்றியத்திற்கு உட்பட்ட தாழக்குடி கிராமத்தில் 1000 ஏக்கருக்கும் மேல் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் நெல்லை அங்குள்ள கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வந்தனர். தற்போது அறுவடை காலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அரசு நெல்லை கொள்முதல் செய்வதில் ஈரப்பதம், நெல்லின் தன்மை போன்றவற்றில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனால் பெரும்பாலான விவசாயிகள் நெல்லை கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு செல்லாமல் வயல்களில் வைத்தே தனியார் அரிசி ஆலைகளுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
15 நாட்களாக...
ஒரு சில விவசாயிகள் மட்டும் நெல்லை கொள்முதல் நிலையத்தில் கொண்டு குவித்து உள்ளனர். அவர்களிடம் ஈரபதத்தை காரணம் காட்டி 15 நாட்களாக கொள்முதல் செய்யாமல் இருக்கின்றனர். இதனால் விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார்கள்.
இதுகுறித்து விவசாயிகள் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து, 'விதிமுறைகளை தளர்த்தி நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முறையிட்டனர். அவரும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசினார். மேலும் இந்த பிரச்சினை சம்பந்தமாக தாழக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவர் ரோகிணி அய்யப்பன் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
விதிகளை தளர்த்த வேண்டும்
இந்தநிலையில் தற்போது மழை பெய்துவருவதால் நெல்லின் ஈரப்பதம் குறையவில்லை. எனவே நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல்லை விவசாயிகள் வேறு வழியில்லாமல் தனியார் அரிசி ஆலைக்கு கிடைத்த விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.
கடன் வாங்கி பயிர்செய்த நெல்லுக்கு சரியான விலை கிடைக்கவில்லையே என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே அரசு கொள்முதல் நிலையத்தில் கட்டுபாடுகளை தளர்த்தி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.