திருச்சி
கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் உண்ணாவிரதம்
|கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.
விவசாய கூலி வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காத காரணத்தால் தேசிய ஊரக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். அரியாறு-கோரையாறு-உய்யகொண்டான்-குடமுருட்டி ஆறு-கொடிங்கால் ஆகியவற்றில் நிதி ஒதுக்கீடு செய்து நிரந்தர பணிகளை தொடங்க வேண்டும். ஆறு, ஏரி, குளங்கள், கண்மாய்கள், குட்டை ஆகியவற்றில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் கடலுக்கு சென்று வீணாக கலப்பதை தடுக்கும் வகையில் கதவணைகள், தடுப்பணைகள் மூலம் தண்ணீரை சேமிக்க வேண்டும்.
காலநிலை மாற்றத்தாலும், இயற்கை பேரிடராலும் பாதிப்புக்குள்ளாகிய விவசாய பயிர்களுக்கு உரிய இழப்பீடு, பயிர் காப்பீட்டு நிவாரணம் வழங்க வேண்டும். திருச்சி மாநகரத்துக்கு உட்பட்ட கே.சாத்தனூர், பஞ்சப்பூர் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான 100 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். திருச்சி மாவட்டத்தில் புதிய டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என்பது உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நேற்று காலை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இதில் மாநில தலைவர் சின்னதுரை தலைமையில் 10 விவசாயிகள் பங்கேற்றனர். அவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.