ராமநாதபுரம்
பருத்திக்கு விலை இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம்
|முதுகுளத்தூர் பகுதியில் பருத்தி விளைச்சல் குறைந்ததுடன் விலையும் இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் பகுதியில் பருத்தி விளைச்சல் குறைந்ததுடன் விலையும் இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
பருத்தி விவசாயம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயத்தை விட பருத்தி மற்றும் மிளகாய் விவசாயமே அதிகமாக நடைபெற்று வருகிறது. அதுபோல் மாவட்டத்திலேயே முதுகுளத்தூர் மற்றும் கடலாடி தாலுகாவை சுற்றிய பெரும்பாலான கிராமங்களில் அதிகமாகவே பருத்தி மற்றும் மிளகாய் விவசாயம் நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய கீழத்தூவல், மிக்கேல்பட்டினம், பூசேரி, செங்கற்படை தேரிருவேலி, மட்டியாரேந்தல், தாழியாரேந்தல் உள்ளிட்ட பல கிராமங்களிலும் பருத்தி விவசாயம் நடைபெற்று உள்ளது.. இந்த நிலையில் இந்த ஆண்டு பருத்தி விவசாயம் முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய பெரும்பாலான கிராமங்களில் முடியும் தருவாயில் உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருத்தி விளைச்சல் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் விலையும் வெகுவாகவே குறைந்து விட்டதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
விளைச்சல்
இதுகுறித்து தேரிருவேலி பகுதியை சேர்ந்த விவசாயி அந்தோணி கூறியதாவது:-
கடந்த ஆண்டு மழையும் ஓரளவு பெய்ததால் பருத்தி விளைச்சலும் நன்றாகவே இருந்தது. அதுபோல் ஒரு கிலோ பருத்தி ரூ.100 முதல் ரூ. 120 வரை விலை போனது. சீசன் முடியும் தருவாயில் தான் விலை சற்று குறைந்து ரூ.95 வரை போனது. ஆனால் இந்த ஆண்டு பருத்தி விவசாய சீசன் தொடங்கியதில் இருந்தே மழையும் பெய்யாததால் பருத்தி விளைச்சல் குறைவு தான். தண்ணீர் இல்லாததுடன் நோய் தாக்குதலாலும் பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டு விட்டது. அதுமட்டும் அல்லாமல் இந்த ஆண்டு பருத்தி பஞ்சுக்கு விலை குறைவு. ஒரு கிலோ பருத்தி தற்போது வெறும் ரூ. 45 மட்டுமே விலை போகிறது.
இந்த ஆண்டு பருத்தி விவசாயத்தில் விவசாயிகளுக்கு அதிகமான நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளது. கஷ்டப்பட்டு உழைத்து விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் பருத்திக்கு வருகிற ஆண்டில் இருந்தாவது அரசே நல்ல விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.