< Back
மாநில செய்திகள்
குடகனாறு மாசுபடுவதை தடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
கரூர்
மாநில செய்திகள்

குடகனாறு மாசுபடுவதை தடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

தினத்தந்தி
|
29 Sept 2023 11:19 PM IST

கரூா் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடகனாறு மாசுபடுவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கூட்டத்தில், குடகனாற்றில் கலக்கும் கழிவுநீரால் ஆறு அதிகமாக மாசுபடுவதை தடுக்க வேண்டும். பயிர் காப்பீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட வேண்டும். ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்கும் பொருட்டு அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்.

தடுப்பணையில் துளை...

மானிய விலையில் வைக்கோல் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேச்சேரி திட்டத்தில் கால்நடைகளுக்கு தடுப்பு ஊசி போடுவதற்கு முகாம்கள் அமைக்க வேண்டும். பாலராஜபுரம் நீர் பாசன வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் வெளியேறுவதற்கான பாதையினை தூர்வார வேண்டும்.

கோடந்தூரில் உள்ள தடுப்பணையில் துளை போட்டுள்ளதை அடைக்க வேண்டும். புன்னம் பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக புதிய குடிநீர் குழாய் அமைக்கப்படுகிறது அதனால் சிமெண்டு சாலையில் சேதம் அடைய வாய்ப்பு உள்ளதால் குடிநீர் குழாய்களை மாற்றுப் பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

நடவடிக்கை எடுக்கப்படும்

மருதூர் உமையாள்புரம் இடையே கதவணை அமைக்க வேண்டும். மாயனூர் வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். குடகனாறு தொடர்பான வல்லுனர் அறிக்கையை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

வங்கி வசதி வேண்டும்

முன்னதாக கூட்டத்தில், காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் முருகேசன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- வடசேரி கிராமத்தில் கார்னாம்பட்டியில் உள்ள மயான மண் சாலை மற்றும் பாலசமுத்திரப்பட்டி சாலையை மேம்படுத்த வேண்டும். காவல்காரன்பட்டியில் அரசுடைமையாக்கப்பட்ட ஒரு வங்கி அமைத்து தர வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சாலையை அகலப்படுத்த கோரிக்கை

இதேபோல் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- ஆர்டி மலையில் இருந்து புலிதேரி மற்றும் சீத்தப்பட்டியில் இருந்து திருச்சி-திண்டுக்கல் ஆகிய நெடுஞ்சாலைக்கு செல்லும் தார்சாலையை சரிசெய்து அகலப்படுத்தி தர வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் ஆர்டி மலை கீலவாளியம்பட்டி பழனிச்சாமி என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு நிலம் எடுப்பதற்கு, சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி நிலத்திற்கான இழப்பீடு தொகை நிர்ணயம் செய்து தர வேண்டும். நிலத்தினை சிறப்பு குழுக்கள் அமைத்து நேரடியாக களஆய்வு மேற்கொண்டு நிலத்தின் இழப்பீடு தொகை நிர்ணயம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்