தஞ்சாவூர்
சம்பா, தாளடி பயிர்களை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்- விவசாயிகள்
|சம்பா, தாளடி நெல் பயிர்களை காப்பாற்ற மேட்டூர் அணையிலிருந்து உடனே தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி கரையோர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பா, தாளடி நெல் பயிர்களை காப்பாற்ற மேட்டூர் அணையிலிருந்து உடனே தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி கரையோர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல் சாகுபடி
காவிரி ஆற்றின் வடகரை பகுதிகளான திருப்பழனம், ஈச்சங்குடி, சோமேஸ்வரபுரம், மணலூர், கணபதி அக்ரகாரம், பெருமாள் கோவில், உள்ளிக்கடை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர்.
இவர்கள் கடந்த ஆண்டு சம்பா அறுவடைக்கு பிறகு கோடை பயிர்களான எள், உளுந்து, பச்சை பயறு மற்றும் காய்கறி பயிர்களை பயிரிட்டிருந்தனர். இந்த பயிர்களின் அறுவடைக்குப் பிறகு சற்று காலதாமதமாக தான் குறுவை சாகுபடி பணிகளை தொடங்கினர்.
மேட்டூர் அணை
குறுவை அறுவடைக்கு பிறகு தொடர் மழை மற்றும் காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் வெள்ளப் பெருக்கால் நவம்பர் மாத தொடக்கத்திலும், டிசம்பர் மாத இறுதியிலும் சம்பா, தாளடி நடவு பணிகளை மேற்கொண்டனர்.
இந்த பயிர்கள் இப்போது தான் கதிர் வந்து முற்றும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் விவசாயிகள் கலக்கம் அடைந்தனர். பயிர்களை காப்பாற்ற மேட்டூர் அணையை மீண்டும் திறக்க வேண்டும் என இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாமதமாக தொடக்கம்
இதுகுறித்து கணபதி அக்ரகாரம் கிராமத்தை சேர்ந்த முன்னோடி விவசாயி சீனிவாசன் மற்றும் கிராமத்தினர் கூறும்போது, 'தொடர் மழை காரணமாக சம்பா, தாளடி நடவு பணிகளை தாமதமாக தான் தொடங்கினோம்.
இப்போதுதான் இந்த பயிர்கள் கதிர் வந்தும், வராத நிலையில் உள்ளது. சில இடங்களில் பயிர்கள் வளர்ச்சி பருவத்தில் உள்ளது. இந்த நிலையில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு விட்டது.
காயும் பயிர்கள்
இருந்த ஈரப்பதத்தை கொண்டு இதுவரை பயிர்களை காப்பாற்றி விட்டோம். இப்போது இப்பகுதியில் கடுமையான வெயில் அடிப்பதால் வயல்களில் வெடிப்புகள் ஏற்பட்டு பயிர்கள் காய தொடங்கியுள்ளது. எனவே மேலும் சில நாட்களுக்கு தண்ணீர் விட்டால் தான் இந்த பயிர்களை முழுவதும் காப்பாற்ற முடியும்.
இல்லையெனில் இப்பகுதி விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்க வேண்டி இருக்கும். இதற்கிடையே டெல்டா மாவட்டத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதனால் நம்பிக்கையுடன் காத்திருந்தோம். ஆனால் இப்பகுதியில் மழை எதுவும் பெய்யவில்லை.
சம்பா, தாளடி நெல் பயிர்களை காப்பாற்ற மேட்டூர் அணையிலிருந்து உடனே தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி கரையோர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே வேளாண்மை, நீர் வளத்துறை அதிகாரிகள் இப் பகுதியில் ஆய்வு செய்ய வேண்டும். உடனடியாக மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றின் வட பகுதி வயல்களை சென்றடையுமாறு சில நாட்களாவது தண்ணீர் திறக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இப்பகுதி விவசாயிகள் பெருத்த இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்' என்றனர்.