காஞ்சிபுரம்
காஞ்சீபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
|காஞ்சீபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகள் விவசாயிகளுக்கு வழங்கினர்.மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.
இன்று நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் 11 விவசாய பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 67 ஆயிரத்து 951 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வழங்கினார். வேளாண்மை துறை சார்பில் 3 நபர்களுக்கு இடுபொருட்கள் முழு மானியத்துடன் வழங்கப்பட்டது.
2 விவசாய பெருமக்களுக்கு விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறை சார்பில், அங்ககச் சான்று வழங்கப்பட்டது.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கான ஆணை 2 நபர்களுக்கும், முருங்கை விதைப்பொருள் 1 நபருக்கும் மற்றும் வெண்டை விதைப்பொருள் ஒருவருக்கும் வழங்கப்பட்டது. வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 2 விவசாயிகளுக்கு அரசு மானிய விலையில் பவர் டில்லர் எந்திரமும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, மண்டல வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.