தேனி
உழவர் கூட்டுறவு வங்கியை பொதுமக்கள் முற்றுகை
|உழவர் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
கூடலூர் புதிய பஸ் நிலையம் எதிரே உழவர் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மூலம் கூடலூர் நகர் பகுதியில் 4 ரேஷன் கடைகளும், லோயர்கேம்ப், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூர்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு ரேஷன் கடை என 4 ரேஷன் கடைகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் லோயர்கேம்ப்பில் மின்வாரிய குடியிருப்பு பகுதியில் செயல்படும் ரேஷன் கடையில் கடந்த 3 மாதங்களாக குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்எண்ணெய் சரிவர வழங்கப்படவில்லை என்றும், மண்எண்ணெய் அளவு குறைத்து வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று காலை காலி கேன்களுடன் கூடலூரில் உள்ள உழவர் கூட்டுறவு வங்கிக்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். லோயர்கேம்ப் ரேஷன் கடையில் மண்எண்ணெய் முறையாக வழங்க வேண்டும். கடை விற்பனையாளரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், பழனிவேல் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுதொடர்பாக வழங்கல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.