< Back
மாநில செய்திகள்
வயலில் பயிர்களை மேய்ந்த மாடுகளை சிறைபிடித்த விவசாயிகள்
அரியலூர்
மாநில செய்திகள்

வயலில் பயிர்களை மேய்ந்த மாடுகளை சிறைபிடித்த விவசாயிகள்

தினத்தந்தி
|
23 Oct 2023 2:21 AM IST

வயலில் பயிர்களை மேய்ந்த மாடுகளை விவசாயிகள் சிறைபிடித்தனர்.

உடையார்பாளையம்:

பயிர்கள் சேதம்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியை சுற்றி கரும்பு, மக்காச்சோளம், கடலை, எள், உளுந்து உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மாடுகள் மேய்ந்து பயிர்கள் சேதம் அடைந்து வந்தது. இதையடுத்து நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் மேய்ந்த 10-க்கும் மேற்பட்ட மாடுகளை சிறை பிடித்து ஒரே இடத்தில் கட்டி வைத்தனர்.

அனைத்து மாடுகளும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்றும், இரவு நேரத்தில் மாடுகளை அவிழ்த்து விடுவதால், அவை வயல்களில் மேய்ந்து தங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர். மேலும் இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் விவசாயிகள் புகார் செய்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

இழப்பீடு

இந்நிலையில் தங்களது வயல்களில் பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை மாடுகள் மேய்ந்து நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். மேலும் வருங்காலங்களில் இது போன்ற செயல்களில் மாடுகளின் உரிமையாளர் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் முறையாக எழுதி வாங்க வேண்டும்.

பயிர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சம்பந்தப்பட்ட மாடுகளின் உரிமையாளரிடம் இருந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். மேலும் இனிவரும் காலங்களில் வயல்களில் மேய்கின்ற மாடுகளை பட்டியில் அடைக்கவும், மாட்டு உரிமையாளர்கள் மீது அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை செய்தால் மட்டுமே விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாவதை தடுக்க முடியும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்