< Back
மாநில செய்திகள்
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம்

தினத்தந்தி
|
8 Oct 2022 12:15 AM IST

தியாகதுருகம் பகுதி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு தெரிவித்துள்ளார்

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இயற்கை சீற்றம்

தியாகதுருகம் வட்டாரத்தில் மானாவாரியாக பருத்தி பயிர் சுமார் 1,600 ஹெக்டேர், மக்காச்சோளம் பயிர் சுமார் 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் வருகிற சம்பா பருவத்தில் நெல் சுமார் 3 ஆயிரம் ஹெக்டேர், மானாவாரி உளுந்து 4 ஆயிரம் ஹெக்டேர் அளவில் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இயற்கை சீற்றங்களின் காரணமாக பயிர்கள் ஏதேனும் சேதம் அடைந்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பினை ஈடுகட்டும் வகையில் விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்யது கொள்ளலாம்.

கடைசி நாள்

இவ்வாறு பயிர் காப்பீடு செய்வதற்கு சிட்டா, அடங்கல், ஆதார் எண், வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், மற்றும் பொதுத் துறை வங்கிகளில் உரிய முன்மொழிவுப் படிவத்தை பூர்த்தி செய்து நெல் பயிருக்கு ரூ.463.87, மக்காசோளம் ரூ.269.72, பருத்தி ரூ.454.66, உளுந்து ரூ.266.02 காப்பீடு தொகை செலுத்த வேண்டும். காப்பீடு செலுத்த உளுந்து மற்றும் நெல் பயிருக்கு நவம்பர் 15-ந் தேதியும், மக்காசோளம் மற்றும் பருத்தி ஆகிய பயிருக்கு அக்டோபர் 31-ந் தேதியும் கடைசிநாள் ஆகும். எனவே விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இழப்பீடு கணக்கிடும் முறை

ஒவ்வொரு கிராமத்திலும் தலா 4 வயல்களில் வேளாண்மை, புள்ளியில் துறை, விவசாயிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனத்தின் பிரதிநிதி ஆகியோரின் முன்னிலையில் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அறுவடையில் கிடைக்கும் மகசூல் கடந்த 5 ஆண்டுகளில் அந்த கிராமத்தில் கிடைத்த மகசூலை விட குறைவாக இருக்க வேண்டும். குறைவாக கிடைத்த மகசூல் மற்றும் அந்த அறிவிக்கை செய்யப்பட்ட பயிறுக்கான சராசரி மகசூலுக்கு இடையே உள்ள வேறுபாடே விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்