< Back
மாநில செய்திகள்
நெற்பயிருக்கு மாற்றுப்பயிர் சாகுபடியை மேற்கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் - வேளாண் அதிகாரி தகவல்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

நெற்பயிருக்கு மாற்றுப்பயிர் சாகுபடியை மேற்கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் - வேளாண் அதிகாரி தகவல்

தினத்தந்தி
|
11 Jun 2023 5:19 PM IST

நெல் பயிருக்கு மாற்று பயிர் சாகுபடியை மேற்கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என்று வேளாண் அதிகாரி அசோக் தெரிவித்துள்ளார்.

மாற்றுப்பயிர் திட்டம்

வேளாண்மை இணை இயக்குநர் அசோக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயிர்களின் சுழற்சி, மண்ணை வளமாக்கி, உற்பத்தியை பெருக்கும் இதனை அடையும் பொருட்டு, குறுவை பருவத்தில் நெற்பயிருக்கு மாற்று பயிர்களான சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் குறுவை பருவத்தில் மாற்றுப்பயிர் திட்டம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 210 ஹெக்டேர் பரப்பளவில் செயல்படுத்தப்படுகிறது.

குறுவை, கார், சொர்ணவாரி பருவத்தில் நெற்பயிருக்கு மாற்றாக, குறைந்த நீர் மற்றும் இடுபொருள் தேவையுள்ள சிறுதானியங்கள், பயறுவகைகள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களின் சாகுபடியை ஊக்குவித்தல், ஊட்டச்சத்து மிகு உணவு தானிய உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் குறுகிய கால பயிர்களை பயிரிடுவதன் மூலம் பயிர் சாகுபடி திறனை அதிகரித்தலும், மண் வளத்தை ஊக்குவித்தலும் இந்த திட்டத்தின் நோக்கமாக உள்ளது.

உழவன் செயலியில்

இந்த திட்டத்தை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் பயறு வகைகளான உளுந்து, எண்ணெய் வித்து பயிர்களான மணிலா, சிறுதானிய பயிர்களான ராகி விதைகள், உயிர் பூஞ்சான கொல்லிகளான சூடோமோனாஸ், டிரைக்கோடர்மா விரிடி, மற்றும் திரவ உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் (இதரம்), பாஸ்போபாக்டீரியா முதலியன 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

உளுந்து விதை ரகங்களான வம்பன் 8, வம்பன் 11, மணிலா விதை ரகங்களான டி.எம்.வி. 14, ஜி.ஜே.ஜி 31, தரணி, கேழ்வரகில் கோ 15, எம்.எல் 365 போன்ற உயர் விளைச்சல் ரகங்கள் இருப்பில் உள்ளது. எனவே விவசாயிகள் இந்த திட்டதில் பயன்பெற உழவன் செயலியில் முன்பதிவு செய்தோ அல்லது தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகியும் பயன் பெற்று, தங்களது பயிர் சுழற்சி முறையை பின்பற்றலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்