< Back
மாநில செய்திகள்
விவசாயிகள் 15-ந்தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம் - அதிகாரி தகவல்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

விவசாயிகள் 15-ந்தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம் - அதிகாரி தகவல்

தினத்தந்தி
|
11 Nov 2022 3:51 PM IST

விவசாயிகள் 15-ந்தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம் என்று வேளாண் அதிகாரி தயா சங்கர் லால் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர், தயா சங்கர் லால் ஸ்ரீவத்சவா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பொழிய தொடங்கியுள்ள காரணத்தால் வெவ்வேறு நிலைகளில் உள்ள சம்பா பருவ நெற்பயிர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தகுதியுள்ள விவசாயிகள் அனைவரும் வருகிற 15-ந்தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறுங்கள்.

இந்த திட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிரான நெல் (சம்பா), பயிரிடும் விவசாயிகள் அனைவரும் இந்த திட்டதில் சேர தகுதி உள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குத்தகைக்கு பயிர் செய்யும் விவசாயிகள் உட்பட அனைவரும் இந்த திட்டதில் சேர தகுதி உள்ளவர்கள் ஆவர்.

பயிர்கடன் பெறும் விவசாயிகள் அவர்களின் விருப்பத்தின் பேரில் கடிதம் கொடுத்தும், பயிர்கடன் பெறாத விவசாயிகள் தங்களின் விருப்பத்தின் பேரிலும் சேரலாம்.

விதைக்க, நடவு செய்ய இயலாத சூழ்நிலை, விதைப்பு பொய்த்து விடுதல், இயற்கை இடர்பாடுகள், இடர் துயர் அபாய நிகழ்வுகள், அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பு போன்றவற்றுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. தகவல்களுடன் கூடிய வங்கி புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல், கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய சிட்டா நடப்பு சாகுபடி அடங்கல் அல்லது விதைப்பு சான்றிதழ், முன் மொழிவு படிவம் மற்றும் விவசாயி பதிவு படிவம் போன்றவற்றுடன் ரூ.497 பிரீமிய தொகையை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தி காப்பீடு செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தற்போது அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், புயல், வெள்ளத்தினால் பயிர் சேதம் அடைந்த பிறகு காப்பீடு செய்ய இயலாது. ஆகையால், விவசாயிகள் அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே தங்களது சம்பா நெல் பயிரை காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விரிவான விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை துறை அலுவர்களை தொடர்பு கொண்டும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் பிரீமியம் தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன் பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்