< Back
மாநில செய்திகள்
வேளாண்மை கல்லூரி அமைய வேண்டி விவசாயிகள் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடு
கரூர்
மாநில செய்திகள்

வேளாண்மை கல்லூரி அமைய வேண்டி விவசாயிகள் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடு

தினத்தந்தி
|
25 Oct 2023 11:28 PM IST

மணவாசியில் வேளாண்மை கல்லூரி அமைய வேண்டி விவசாயிகள் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.

வேளாண்மை கல்லூரி

தமிழக அரசு மாவட்டம்தோறும் வேளாண்மை கல்லூரி அமைத்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்திற்கு வேளாண்மை கல்லூரி தொடங்கப்பட்டு, கரூரில் தனியார் இடத்தில் கல்லூரி வகுப்புகள் நடந்து வருகிறது. வேளாண்மை கல்லூரிக்கு சொந்தமான கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் வேளாண்மை கல்லூரி அமைக்க கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், மணவாசி ஊராட்சி கோரகுத்தி செல்லும் சாலையில் மணவாசி மத்தியபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 120 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் வேளாண்மை கல்லூரி அமைக்க இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து மண் பரிசோதனை மேற்கொண்டனர்.

சிதறு தேங்காய்

வேளாண்மை கல்லூரி அமைக்க 63 ஏக்கர் கோவில் இடத்தை வருவாய்த்துறையினர் நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணியை முடித்து அரசுக்கு அனுப்பி உள்ளனர். 63 ஏக்கர் நிலத்திற்கு இழப்பீட்டு தொகை கோவிலுக்கு வழங்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மணவாசியில் வேளாண்மை கல்லூரி அமைய வேண்டி காவிரி நீர்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மணவாசி மத்தியபுரீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் காவிரி நீர்பாசன விவசாயிகள் சங்க செயல் தலைவர் மகாதானபுரம் ராஜாராம் தலைமையில் விவசாயிகள் சுப்புராமன் உள்பட விவசாயிகள் கோவில் அருகில் சிதறு தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.

மேலும் செய்திகள்