புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணிப்பு
|புதுக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு துறை சார்ந்த அதிகாரிகள் யாரும் வரவில்லை என குற்றம்சாட்டி கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மாதம் ஒரு முறை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதேபோல் வருவாய் கோட்டங்களில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது உண்டு. இதில் அந்த வருவாய் கோட்டத்திற்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் தொடா்பாக எடுத்துரைப்பார்கள். இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதில் அளிப்பது உண்டு.
அந்த வகையில் புதுக்கோட்டை வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதற்காக விவசாயிகள் பலர் கூட்டத்திற்கு வந்தனர்.
புறக்கணிப்பு
புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. முருகேசன் விடுமுறையில் இருந்ததால் பொறுப்பாக கலால் உதவி ஆணையர் மாரிமுத்து பணியில் இருந்தார். அவரும் காலை 11.15 மணிக்கு மேல் கூட்டம் நடைபெற்ற அரங்கிற்கு வந்தார். ஆனால் ஒரு சில அதிகாரிகள் வரவில்லை. அத்துறையை சேர்ந்த ஊழியர்கள் வந்திருந்தனர். இந்த நிலையில் கூட்டத்திற்கு துறை சார்ந்த அதிகாரிகள் யாரும் வரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர். மேலும் விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில்லை என கூறி, இந்த கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம் என கூறி விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பலர் கூட்டத்தை விட்டு வெளியேறினர்.
அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்த முயன்றும் யாரும் கேட்கவில்லை. விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை.
பரபரப்பு
இதற்கிடையில் கூட்டத்திற்கு துறை சார்ந்த ஊழியர்கள் சிலர் வந்திருந்ததாகவும், ஆர்.டி.ஓ. இல்லாததால் கூட்டத்தை புறக்கணித்து விட்டு விவசாயிகள் சென்றதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து சென்றதால் தாசில்தார் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.