< Back
மாநில செய்திகள்
முள்ளங்கிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை
அரியலூர்
மாநில செய்திகள்

முள்ளங்கிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை

தினத்தந்தி
|
24 Dec 2022 7:03 PM GMT

முள்ளங்கிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கீழப்பழுவூர்:

முள்ளங்கி சாகுபடி

அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம், மேலவண்ணம் மற்றும் அதை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முள்ளங்கி, கத்தரி, தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இதில் சுமார் 50 ஏக்கருக்கு மேலாக முள்ளங்கியை ஆண்டுதோறும் விவசாயிகள் பயிரிடுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஏக்கரில் முள்ளங்கி பயிரிடப்பட்டது. அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள முள்ளங்கிக்கு சந்தைகளில் உரிய விலை கிடைக்கவில்லை. முள்ளங்கியை கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் விலை நிர்ணயம் செய்து, சந்தையில் மொத்த கொள்முதல் செய்கின்றனர்.

கோரிக்கை

ஒரு ஏக்கரில் முள்ளங்கி சாகுபடி செய்ய சுமார் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை செலவாகிறது. இதனால் குறைந்தது ஒரு கிலோ முள்ளங்கிக்கு ரூ.5 கிடைத்தால் நஷ்டம் இல்லாமல் இருக்கும். ஆனால் 2 ரூபாய் விலை என்பது மிக மிக குறைவான விலை ஆகும். இதனால் முள்ளங்கி சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்தனர்.

முள்ளங்கியை பறிக்கும் தொழிலாளர்களின் கூலிக்கு கூட முள்ளங்கி விலை கிடைக்காததால், ஒரு விவசாயி தான் பயிரிட்ட முள்ளங்கியை வயலிலேயே டிராக்டர் மூலம் உழுது வயலுக்கு உரமாக்கி உள்ளார். எனவே விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்