விருதுநகர்
கரும்புக்கு போதிய விலை கிடைக்கவில்லை
|விருதுநகர் மாவட்டத்தில் கரும்புக்கு போதிய விலை கிடைக்கவில்லை என கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கரும்புக்கு போதிய விலை கிடைக்கவில்லை என கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
கரும்பு சாகுபடி
ஆண்டுதோறும் விருதுநகர் மாவட்டத்தில் எரிச்சநத்தம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கரும்பு அதிகமாக சாகுபடி செய்யப்படுவது வழக்கம். கடந்த காலங்களை போல் அல்லாமல் நடப்பாண்டிலும் கிட்டத்தட்ட 30 ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ.1¾ லட்சம் வரை சாகுபடி செலவாகியுள்ள நிலையில் ஏக்கருக்கு ஆயிரத்து 300 கட்டு கரும்பு கிடைக்கும் நிலை உள்ளது. கரும்பு விதையை விட சாகுபடிக்கான உரத்தின் விலை அதிகரித்துள்ளதால் சாகுபடி செலவும் அதிகரித்துவிட்டது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பொங்கலையொட்டி ரேஷன் கடைகளில் கரும்பு வினியோகம் செய்யப்படுவதால் சாகுபடி செய்த கரும்புகளை எளிதில் விற்பனை செய்து விடலாம் என விவசாயிகள் எண்ணி வந்த நிலையில் உற்பத்திஅதிகம் உள்ளதால் விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் விலை கிடைக்கவில்லை. கரும்பு வியாபாரிகள் 15 கரும்பு கொண்ட ஒரு கட்டுக்கு ரூபாய் 230 முதல் ரூ. 240 வரை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர்.
கேட்கும் விலைக்கு விற்பனை
இதுகுறித்து கரும்பு விவசாயி முத்துப்பாண்டி தெரிவித்ததாவது:- பொங்கலுக்கு ரேஷன் கடைகளில் கரும்பு வினியோகம் செய்யப்படும் நிலையில் நாங்களும் கிராம நிர்வாக அதிகாரிகளிடம் பதிவு செய்திருந்தோம். ஆனால் பல்வேறு நிபந்தனைகளை கூறி எங்களிடம் கரும்பு கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் வேறு வழியின்றி வியாபாரிகளிடம் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. பொங்கல் நெருங்கி வரும் நிலையில் கரும்பு விற்பனை இன்னும் சூடு பிடிக்கவில்லை. நாங்களும் செலவு செய்த தொகையாவது கிடைக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் வியாபாரிகள் கேட்கும் விலைக்கு கரும்பை விற்று வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.