கடலூர்
பாசனத்துக்காக என்.எல்.சி.யில் இருந்து தண்ணீா் திறந்துவிடக்கோரி விவசாயிகள் போராட்டம்
|சேத்தியாத்தோப்பு அருகே பாசனத்துக்காக என்.எல்.சி.யில் இருந்து தண்ணீா் திறந்துவிடக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேத்தியாத்தோப்பு,
என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை பயன்படுத்தி சேத்தியாத்தோப்பு அடுத்த நெல்லிக்கொல்லை, துரிஞ்சி கொல்லை. வாழைக் கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு, நெல், சோளம் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் என்.எல்.சி.யில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படவில்லை.
இதனால் நெல்லிகொல்லை உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாய பயிர்களுக்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பயிர்கள் தண்ணீர் இன்றி கருகும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து பாசனத்துக்காக என்.எல்.சி.யில் இருந்து உபரிநீரை உடனே வாய்க்காலில் திறந்து விட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
விவசாயிகள் போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழைக்கொல்லை பகுதியில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள், விவசாய பயிர்களை காப்பாற்றும் வகையில் என்.எல்.சி.யில் இருந்து உபரிநீரை வாய்க்காலில் திறக்க வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலி்ன் பேரில் நெய்வேலி என்.எல்.சி. டி.ஜி.எம்.குமார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது விவசாய நிலங்களை விட வாய்க்கால் மிகவும் ஆழமாக இருப்பதால், விவசாயத்துக்கு தண்ணீர் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க வாய்க்காலில் குழாய் அமைத்து விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனர்.