விருதுநகர்
நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்
|வத்திராயிருப்பு அருகே நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வத்திராயிருப்பு,
கான்சாபுரம் நெல் ெகாள்முதல் நிலையத்தில் தொடர்ந்து கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் நேற்றுமுன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று கொள்முதல் நிலையத்தில் ஏற்கனவே எடை போட்ட நெல் மூடைகளை ஏற்ற வந்த 2 லாரிகளை முற்றுகையிட்டு லாரியில் ஏற்றி விடாமல்தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் கூமாப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர் அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்வதற்கு கலெக்டரிடம் அனுமதி பெற்று உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என விவசாயிகளிடம் உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.