திருச்சி
கருப்பு துணியை தலையில் முக்காடு போட்டு விவசாயிகள் போராட்டம்
|கருப்பு துணியை தலையில் முக்காடு போட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
மலைக்கோட்டை:
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு லாபகரமான விலை தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18 நாட்களாக பல்வேறு விதமாக நூதன முறையில் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 19-ம் நாள் சுதந்திர தினமான நேற்று நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தாலும் விவசாயிகளுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் தலையில் முக்காடிட்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த ஸ்ரீரங்கம் சரக போலீஸ் உதவி கமிஷனர் நிவேதாலட்சுமி, கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் விவசாயிகளிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதைதொடர்ந்து போராட்டக்காரர்கள் தாங்கள் தலையில் கருப்பு துணியால் போட்டு இருந்த முக்காடு துணியை எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.