< Back
மாநில செய்திகள்
விவசாயிகள் அரை நிா்வாணத்துடன் சாலையில் படுத்து போராட்டம்
திருச்சி
மாநில செய்திகள்

விவசாயிகள் அரை நிா்வாணத்துடன் சாலையில் படுத்து போராட்டம்

தினத்தந்தி
|
13 Jan 2023 1:35 AM IST

விவசாயிகள் அரை நிா்வாணத்துடன் சாலையில் படுத்து போராட்டம் நடத்தினர்.

விவசாயிகள் போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விவசாயிகள் தங்களுடைய மேலாடைகளை களைந்து கோவணத்துடன் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு சாலையில் படுத்தும், அமா்ந்தும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கலெக்டர் சமரசம்

அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை சமரசம் செய்து, தங்கள் கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் மனு கொடுக்கும்படி கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே அமர்ந்து இருந்தனர். அப்போது அலுவலகத்திற்கு காரில் கலெக்டர் பிரதீப்குமார் வந்தார். அவர், விவசாயிகளை பார்த்ததும், காரில் இருந்து இறங்கி அவர்களிடம் குறைகளை கேட்டார்.

பின்னர், நாம் சாலையில் இருந்து பேச வேண்டாம், அலுவலகத்துக்குள் செல்லலாம் என்று, விவசாயிகளை அழைத்துக்கொண்டு நுழைவு வாயிலில் இருந்து அவர்களுடன் கலெக்டரும் நடந்து சென்றார். பின்னர், கலெக்டரிடம் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்