புதுக்கோட்டை
நாற்று நடும் பணியில் விவசாயிகள் தீவிரம்
|ஆதனக்கோட்டையில் நாற்று நடும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்தாண்டு 2 லட்சத்து 18 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்திருந்தனர். இந்தாண்டு பருவமழையின்மை, வடகிழக்கு பருவமழை தொடங்காமலிருப்பது உள்ளிட்ட காரணங்களால் மாவட்டத்தில் உள்ள கிணறு, குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் கிணறு மற்றும் குளத்து பாசனத்தை நம்பியிருந்த விவசாயிகள் சம்பா சாகுபடியை கைவிட்ட நிலையில், இந்தாண்டு ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவிலாவது சம்பா நெல் சாகுபடி செய்ய முடியுமா? என்ற கவலை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போது ஆழ்குழாய் கிணறு மூலம் பாசனவசதி பெறும் விவசாயிகள் மட்டுமே சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆதனக் கோட்டை பகுதி வளவம்பட்டி கிராமத்தில் சம்பா பருவத்தில் ஆழ்குழாய் கிணறு மூலம் பாசனவசதி பெறும் வயல்களில் நாற்று நடும் பணியில் விவசாய தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.