< Back
மாநில செய்திகள்
விதைத்து 1 மாதமாகியும் நெல் முளைக்காததால் விவசாயிகள் வேதனை
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

விதைத்து 1 மாதமாகியும் நெல் முளைக்காததால் விவசாயிகள் வேதனை

தினத்தந்தி
|
25 Oct 2023 12:15 AM IST

கீழ்வேளூர் ஒன்றிய பகுதிகளில் சம்பா சாகுபடிக்கு போதிய தண்ணீர் இல்லாததால் விதைத்து 1 மாதம் ஆகியும் நெல் முளைக்கவில்லை. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

சிக்கல்:

கீழ்வேளூர் ஒன்றிய பகுதிகளில் சம்பா சாகுபடிக்கு போதிய தண்ணீர் இல்லாததால் விதைத்து 1 மாதம் ஆகியும் நெல் முளைக்கவில்லை. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

சம்பா சாகுபடி

டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டு, குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்றது. பின்னர் போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகியது. இதை தொடர்ந்து விவசாயிகள் சம்பா சாகுபடி செய்ய தொடங்கி விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கீழ்வேளூர் வட்டாரத்தில் உள்ள 43 கிராமங்களில் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது.

தண்ணீர் பற்றாக்குறை

இந்த நிலையில் கீழ்வேளூர் ஒன்றியத்தில் தெற்கு பகுதிகளான கொடியலத்தூர், ஆதமங்கலம், வலிவலம், கோவில் கண்ணாப்பூர், தென்சாரி, தென்மருதூர், கீரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் உழவு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டனர்.

வயல்களில் சன்னரகம் மற்றும் மத்திய ரகம் சம்பா நெல் விதைத்து 1 மாதமாகியும், போதிய தண்ணீர் இல்லாமல் விதைத்த நெல்மணிகள் முளைக்காமல் காய்ந்து போய் விட்டது. இதனால் சாகுபடி செய்த விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

முளைக்கவில்லை

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், திருவாரூர் மாவட்டம் வெண்ணாற்றில் இருந்து பிரிந்து வரும் வெள்ளையாறு, பாசன பகுதிகளான கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள வலிவலம், கொடியலத்தூர், ஆதமங்கலம், கோவில்கண்ணப்பூர், கீரங்குடி, தென்சாரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கிறது.

இந்த நிலையில் ஆற்றில் போதிய தண்ணீர் வரத்து இல்லாததாலும், சரி வர பருவமழை பெய்யாத காரணத்தாலும் விவசாயிகள் சாகுபடி செய்த வயல் வறண்டு போய்விட்டது. இதனால் நெல் விதைத்து 1 மாதமாகியும் முளைக்கவில்லை. சம்பா சாகுபடிக்காக விதைப்பு பணிக்காக நகைகளை அடகு வைத்து மற்றும் கடன் வாங்கி செலவு செய்துள்ளோம்.

விவசாயிகள் பாதிப்பு

வயல்களில் விதைப்பு செய்த நெல் விதைகளை மயில், புறா உள்ளிட்ட பறவைகள் சாப்பிட்டு வருகின்றன. மேலும் இதுவரை குறுவைக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் விவசாயிகளுக்கு வந்து சேரவில்லை. மேலும் சம்பா சாகுபடியை விவசாயிகள் தொடர்ந்து மேற்கொள்ளலாமா? என வேளாண்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு புரிதலை ஏற்படுத்த வேண்டும். இதனால் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இழப்பீடு வழங்க வேண்டும்

சமீபத்தில் பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்கிட வேண்டும். தற்போது சம்பா பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்