விருதுநகர்
கீரை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
|வெம்பக்கோட்டை பகுதிகளில் கீரை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜயரங்கபுரம் ஊராட்சியை சேர்ந்த மீனாட்சிபுரம், கோதை நாச்சியார்புரம், பூசாரி நாயக்கன்பட்டி, எட்டக்கப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அகத்திக்கீரை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை ஆகியவற்றை சாகுபடி செய்துள்ளனர்.
கிணற்று பாசனத்தில் குறைந்த நீரில் பயிர் செய்யப்பட்ட கீரைகள் நன்றாக விளைந்து உள்ளதாலும், போதுமான விலையும் கிடைப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மீனாட்சிபுரத்தை சேர்ந்த விவசாயி துரைக்கண்ணு கூறியதாவது:-
காய்கறிகள் சீசன் முடிவடைந்த பிறகு கீரைகளுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கும் என்பதால் அகத்திக்கீரை, தண்டுக்கீரை உள்பட பல்வேறு கீரைகளை பயிரிட்டோம்.
கிணறுகளில் போதிய தண்ணீர் இருப்பதால் குறைந்த நீரில் கீரைகள் சாகுபடி செய்தோம். சென்ற மாதம் வரை ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை ஆனது. ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. கீரை விலை உயர்வினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் வயலுக்கு வந்து நேரடியாக கீரைகளை வாங்கி செல்வதால் அலைச்சலும் குைறகிறது. தற்போது கீரைகளுக்கு போதுமான விலை கிடைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.