திருவாரூர்
நெல்லை காய வைக்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு
|திருவாரூர் மாவட்ட பகுதிகளில் திடீர், திடீரென மழை பெய்வதால் நெல்லை காய வைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.
திருவாரூர் மாவட்ட பகுதிகளில் திடீர், திடீரென மழை பெய்வதால் நெல்லை காய வைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.
மத்திய குழுவினர் ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. 90 சதவீதம் அளவில் குறுவை அறுவடை பணிகள் முடிவடைந்து இருந்த நேரத்தில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
மழைக்கு பின்னர் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லின் ஈரப்பதம் அதிகமாகி விட்டது. இதனால் நெல்லை கொள்முதல் செய்ய அரசு நிர்ணயித்துள்ள ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக திருவாரூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
காய வைக்கும் பணி...
தற்போது மாவட்டம் முழுவதும் பரவலாக அறுவடை பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த நிலையில் நேற்று பரவலாக மழை பெய்தது. காலை நேரத்தில் கடுமையான வெயில் காணப்பட்டதால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை வெயிலில் காயவைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
எனினும் மாலையில் மழை பெய்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே உள்ள உள்ளிக்கோட்டை, தளிக்கோட்டை, மகாதேவபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. திடீர், திடீரென மழை பெய்வதால் நெல்லை காய வைத்து விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருவதாகவும், அரசு உடனடியாக ஈரப்பதத்தை உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.