நாமக்கல்
விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
|வேலகவுண்டம்பட்டி அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்திவேலூர்
விவசாயி
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள முசிறி வட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 47). விவசாயி. இவரது மனைவி கவிதா (38). இவர்களுக்கு சாஷ்திகா (11), கீர்த்திகா (9) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். பிரகாஷ்குமார் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சொத்து பிரிப்பது சம்பந்தமாக பிரகாஷ் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.
இதன் காரணமாக அவரது மனைவி கவிதா கணவரிடம் கோபித்துக் கொண்டு கொட்டாம்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பிரகாஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இவர் வெகுநேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர்.
தற்கொலை
அப்போது அங்குள்ள மாட்டு கொட்டகையில் பிரகாஷ் கயிற்றால் தூக்குப்போட்டு இறந்த நிலையில் தொங்கிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவரது மனைவி கவிதா மற்றும் வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு வந்த போலீசார் பிரகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.