< Back
மாநில செய்திகள்
விவசாயி குடும்பத்துடன் உண்ணாவிரதம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

விவசாயி குடும்பத்துடன் உண்ணாவிரதம்

தினத்தந்தி
|
11 May 2023 12:45 AM IST

மோசடி செய்து டிராக்டரை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி ஒருவர் தனது குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மோசடி செய்து டிராக்டரை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி ஒருவர் தனது குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உண்ணாவிரதம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா தேவூர் காந்தி தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார். விவசாயி. இவர் நேற்று தன்னுடைய மனைவி, 2 மகள்கள், மகனுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். தொடர்ந்து கலெக்டர் கார் நிறுத்தும் இடம் அருகே, கையில் பதாகையுடன் குடும்பத்துடன் தரையில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் அங்கு சென்று சுரேஷ்குமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சுரேஷ்குமார் தான் கொண்டு வந்த மனுவை போலீசாரிடம் கொடுத்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ரூ.50 ஆயிரம் முன்பணம்

நான் சேமித்து வைத்த பணம் மற்றும் எனது மனைவியின் நகைகளை அடகு வைத்து ஒரு டிராக்டர் வாங்கினேன். போதுமான வருமானம் இல்லாததால் டிராக்டரை வாடகைக்கு கொடுக்க திட்டமிட்டு இருந்தேன்.

இந்த நிலையில் 5 பேர் என்னிடம் வந்து டிராக்டருக்கு மாதம் ஒன்றுக்கு குத்தகை தொகையாக ரூ.27 ஆயிரம் தந்து விடுவதாகவும், 3 மாத குத்தகைக்கு ரூ.81 ஆயிரம் தருவதாகவும் கூறி ரூ.50 ஆயிரம் முன்பணமாக கொடுத்து, எனது டிராக்டரை எடுத்து சென்றனர். அதன்பிறகு அவர்கள் எந்த தொகையையும் கொடுக்க வில்லை.

மோசடி

இந்த நிலையில் 5 பேரும் சேர்ந்து, டிராக்டரை வேறு ஒருவருக்கு விற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே மோசடி செய்து எனது டிராக்டரை விற்ற 5 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது டிராக்டரை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து சுரேஷ்குமார் மற்றும் குடும்பத்தினர் உண்ணாவிரதத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

பரபரப்பு

மோசடி செய்து டிராக்டரை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் நாகை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்