< Back
மாநில செய்திகள்
விபத்தில் விவசாயி பலி; இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் போராட்டம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

விபத்தில் விவசாயி பலி; இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் போராட்டம்

தினத்தந்தி
|
3 Oct 2023 12:15 AM IST

ஸ்ரீவைகுண்டம் அருகே மோட்டார் சைக்கிள்-டிராக்டர் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி பலியானார். அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

ஸ்ரீவைகுண்டம்:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் வள்ளிநாயகம் (வயது 65). விவசாயி. இவரும், அதே ஊரை சேர்ந்த கருப்பசாமி என்பவரும் கடந்த 29-ந்தேதி வெள்ளூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து ெகாண்டிருந்தனர்.

புதுக்குடி ரெயில்வே கேட் அருகே வந்தபோது, எதிரே ரெயில்வே ஒப்பந்த பணிக்காக வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வள்ளிநாயகம், கருப்பசாமி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி வள்ளிநாயகம் நேற்று முன்தினம் உயிரிழந்தார். கருப்பசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவரான சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் மரணமடைந்த வள்ளிநாயகத்திற்கு செல்லத்தாய் என்ற மனைவியும், கொம்பையா என்ற மகனும், வண்ணமதி என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், வடமாநில ஒப்பந்த பணியாளரின் அஜாக்கிரதையால் தான் விபத்தில் வள்ளிநாயகம் மரணம் அடைந்ததாகவும், எனவே வள்ளி நாயகம் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். என கோரி அவரது உடலை வாங்க மறுத்து வெள்ளூரில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பி.எம்.டி. மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படாததால், தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்