கரூர்
கார் மோதி விவசாயி படுகாயம்
|கார் மோதி விவசாயி படுகாயம் அடைந்தார். மற்றொரு விபத்தில் மூதாட்டி பலியானார்.
விவசாயி படுகாயம்
கரூர் மாவட்டம் தளவாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 61), விவசாயி. இவர் சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சேலத்தில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சரவணனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய கோவை ரத்தினபுரியை சேர்ந்த இளம்பரிதி மீது வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்தார். மேலும் விபத்து ஏற்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.
மூதாட்டி பலி
இதேபோல் கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மூதாட்டி மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த மூதாட்டியை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காந்தி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
விபத்தில் இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.