அரியலூர்
பாம்பு கடித்து விவசாயி சாவு
|பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தை சேர்ந்தவர் ராமர்(வயது 42). விவசாயி. இவருக்கு சொந்தமான மாடுகளை அவரது வயலில் மேய்ச்சலில் விட்டுவிட்டு அதே வயலில் இருக்கும் கொட்டகையில் மாலை நேரத்தில் கட்டி வைப்பது வழக்கம். அதுபோல் நேற்று முன்தினமும் மேய்ச்சல் முடிந்து, மாடுகளை மாட்டு கொட்டகையில் கட்டுவதற்கு ராமர் வயலுக்கு சென்றுள்ளார். மாடுகள் கட்டசென்ற ராமர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி சுந்தரி வயல் பகுதிக்கு சென்று பார்த்தார். அப்போது ராமர் அங்கு சுயநினைவு இல்லாமல் கிடந்துள்ளார். இதையடுத்து அப்பகுதி மக்கள் உதவியுடன் ராமரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச்சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் பாம்பு கடித்து ராமர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து சுந்தரி தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.