நாகப்பட்டினம்
தண்ணீர் இன்றி கருகிய பயிரை கண்டு மாரடைப்பால் விவசாயி சாவு
|திருக்குவளை அருகே தண்ணீர் இன்றி கருகிய பயிரை கண்டு மாரடைப்பால் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
வேளாங்கண்ணி:
திருக்குவளை அருகே தண்ணீர் இன்றி கருகிய பயிரை கண்டு மாரடைப்பால் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
குறுவை சாகுபடி
டெல்டா மாவட்ட விவசாயிகளின் சாகுபடிக்காக ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து டெல்டா மாவட்ட விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்திருந்தனர். ஆனால் இந்த தண்ணீர் டெல்டா மாவட்ட கடைமடை பகுதிக்கு குறைந்த அளவே வந்துள்ளது. இதனால் சாகுபடி செய்த பயிர்கள் தண்ணீர் இன்றி கருகியது.
இந்த நிலையில் நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த திருவாய்மூர் தெற்கு தெரு பகுதியை சேர்ந்த விவசாயி ராஜ்குமார் (வயது 47) என்பவர் 15 ஏக்கர் விளைநிலத்தில் குறுவை சாகுபடி செய்திருந்தார்.
தண்ணீரின்றி கருகிய பயிர்கள்
இவர் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் நீரின்றி கருகி வந்ததால் தொடர்ந்து கவலையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் ராஜ்குமார் நேற்று முன்தினம் தனது வயலுக்கு சென்று பார்த்தபோது பயிர்கள் கருகி இருப்பதை கண்டு மனமுடைந்தார்.
இதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருக்குவளை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
விவசாயி சாவு
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருக்குவளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதை கண்டு விவசாயி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி விவசாயிகளை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
---
விசாயி ராஜ்குமார்.
---
தண்ணீரின்றி கருகி வரும் நெற்பயிரை படத்தில் காணலாம்.